Published:Updated:

மருமகள் குறித்து குமுறிய மாமியார்... பரிகாரம் செய்வதாக நகைகளுடன் கம்பிநீட்டிய மந்திர ஆசாமி!

கம்பிநீட்டிய மந்திர ஆசாமி!

மருமகள் உடனான பிரச்னையைத் தீர்த்துவைத்து குடும்பத்துக்கே திருஷ்டி கழிப்பதாகக் கூறி பெண்ணிடமிருந்து நகைகளைப் பறித்துச்சென்ற மந்திர ஆசாமியைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.

மருமகள் குறித்து குமுறிய மாமியார்... பரிகாரம் செய்வதாக நகைகளுடன் கம்பிநீட்டிய மந்திர ஆசாமி!

மருமகள் உடனான பிரச்னையைத் தீர்த்துவைத்து குடும்பத்துக்கே திருஷ்டி கழிப்பதாகக் கூறி பெண்ணிடமிருந்து நகைகளைப் பறித்துச்சென்ற மந்திர ஆசாமியைப் போலீஸார் தேடி வருகிறார்கள்.

Published:Updated:
கம்பிநீட்டிய மந்திர ஆசாமி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கெங்காபுரம், முத்துமாரியம்மன் கோயில் தெருவில் அன்பு என்பவர் பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இவர் மனைவி கவிதா, நேற்று முன்தினம் கடையில் இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அங்குவந்து பொருள்கள் வாங்குவதைப்போல பேச்சுக்கொடுத்திருக்கிறார். தன்னுடைய குமுறலைக் கேட்க ஒரு ஆள் கிடைத்ததே என்ற நிம்மதியில், அவரிடம் குடும்பப் பிரச்னைகளை கொட்டித் தீர்த்திருக்கிறார் கவிதா. அதைக்கேட்ட பெண்ணும் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை கவிதா கடையிலிருப்பதை கவனித்துவிட்டு இளைஞர் ஒருவர் பைக்கில் வந்து நின்றார். நெற்றி நிறைய விபூதி குங்குமம் பூசியிருந்தார். கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்தார்.

கெங்காபுரம்
கெங்காபுரம்

நேராக கவிதாவிடம் சென்று பேச்சுக்கொடுத்த அந்த இளைஞர், ‘‘உங்கள் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன. உனக்கும், உன் மருமகளுக்கும் இடையே தீராதப் பகையும் வளர்கிறது. இப்படியே போனால், விபரீதம் ஆகிவிடும். என் ஞான திருஷ்டியில் எல்லாம் தெரிகிறது. பரிகாரம் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்’’ என பேச்சாலயே... கவிதாவை அதிரவைத்தார். அதிர்ச்சியில் உறைந்த கவிதா, ‘நல்லது நடந்தால் சரி..’ என நினைத்தபடியே, அந்த இளைஞரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ‘‘பரிகாரத்துக்கு தங்க நகைள் தேவைப்படுகின்றன. நீயும், உன் மருமகளும் சண்டையில்லாமல் இருக்க... இருவரின் நகைகளையும் கொண்டு வா..!’’ என மறுபடியும் கண்ணை உருட்டி உருட்டி பீதியடையச் செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த சமயம் வீட்டில் யாருமில்லை. ‘‘மருமகள் நகைகளை எடுத்தால் வம்பாகிவிடும். அதனால், என்னுடைய நகைகளை மட்டும் தருகிறேன்’’ என்றுகூறி, தான் அணிந்திருந்த செயின், கம்மலை கழற்றித் தந்திருக்கிறார். நகைகளை கையில் வாங்கிக்கொண்ட அந்த ஆசாமி, ‘‘நான் மந்திரம் உபயோகத்து, பரிகாரம் செய்யும்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது. நீ வீட்டுக்குள்ளேயே இரு. நான் வெளியில் நிற்கிறேன். வீட்டுக்கே திருஷ்டி கழித்துவிடுகிறேன்’’ என்று சொல்லி, கதவை உள்பக்கமாகப் பூட்டிச் சொல்லியிருக்கிறார். கவிதாவும் வீட்டுக்குள் கதவை பூட்டி நிற்க... நகைகளுடன் வெளியில் வந்த நபர் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.

ஆம்பூர் நகர காவல் நிலையம்
ஆம்பூர் நகர காவல் நிலையம்

நீண்ட நேரம் கழித்து கதவை திறந்த பின்னரே... மோசடி நபரிடம் நகைகளை இழந்தது அவருக்குத் தெரியவந்தது. கண்ணீர் விட்டு கதறி அழுதார். அக்கம், பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த மர்ம ஆசாமியின் படம் பதிவாகியிருந்தது. அதைவைத்து அவரைத் தேடி வருகிறார்கள். முந்தைய நாள் வந்து கதைக்கேட்டுச் சென்ற பெண்ணின் விவரம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

‘‘செய்வினை, சூனியம் எடுப்பதாகவும், குடும்பப் பிரச்னைகளை தீர்ப்பதாகவும் கூறிக்கொண்டு வரும் மோசடி பேர்வழிகளிடம் நகை, பொருள்களை கொடுத்து ஏமாற வேண்டாம். இது மாதிரியான நபர்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்!