Published:Updated:

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு - பயங்கரவாதிகளை 28 நாள் கஸ்டடியில் விசாரிக்கக் கோரும் போலீஸ்!

பயங்கரவாதிகள் தௌஃபீக், சமீம்
பயங்கரவாதிகள் தௌஃபீக், சமீம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள் முருகன் இதுகுறித்து நாளை மாலை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ.வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் போலீஸை கொலை செய்தவர்கள் பயங்கரவாதிகள் தெளஃபிக், அப்துல் சமீம் எனத் தெரியவந்தது. அவர்கள் கொலை செய்துவிட்டு பள்ளிவாசல் வழியாகத் தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகின. இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளா போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்
போலீஸ் எஸ்.எஸ்.ஐ வில்சன்

அவர்களை கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்த போலீஸார் 16-ம் தேதி களியக்காவிளை மற்றும் தக்கலை காவல் நிலையங்களில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அன்று இரவு குழித்துறை கோர்ட்டில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் இன்று நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு குழித்துறை கோர்ட்டில் நடந்த நிலையில், பயங்கரவாதிகள் மீது உபா சட்டம் பாய்ந்ததால் நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் 28 நாள்கள் காவல்துறை கஸ்டடியில் பயங்கரவாதிகளை விசாரிக்க அனுமதி வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதற்கு தெளஃபிக், அப்துல் சமீம் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானசேகர், ``இவர்கள் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை. வழக்கு ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. மேலும், அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

தீவிரவாதி அப்துல் சமீம்
தீவிரவாதி அப்துல் சமீம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள் முருகன் இதுகுறித்து நாளை மாலை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் தெளஃபிக், அப்துல் சமீம் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின் செல்ல