Published:Updated:

கார்கள் நிறுத்தவே தனி வீடு! - ஹெலிகாப்டர் பிரதர்ஸ்-க்குச் சொந்தமான 12 சொகுசு கார்கள் பறிமுதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போலீஸ் பறிமுதல் செய்த கார்கள்
போலீஸ் பறிமுதல் செய்த கார்கள் ( ம.அரவிந்த் )

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டிலிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் ரூ. 8 கோடி இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் அவர்களது வங்கிக் கணக்கை முடக்கவிருப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் பிரதர்ஸ்மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டிலிருந்து சுமார் 8 கோடி மதிப்புடைய 12 சொகுசு கார்களைப் பறிமுதல் செய்ததுடன், வங்கிக் கணக்கை முடக்குவதற்கான நடவடிக்கையையும் போலீஸார் எடுத்துவருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சகோதரர்களைப் பிடிக்க ஏழு தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடிவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீ்ட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். சகோதர்களான இவர்கள் கிரிஷ் பால் பண்ணை, விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவந்தனர். வெளி நாடுகளிலும் இவர்கள் பல்வேறு தொழில்கள் செய்துவந்ததாகக் கூறப்பட்டது. சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துக்கொண்டு அதிலேயே வலம்வந்ததால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், கடந்த மூன்று வருடங்களாக விக்டரி ஃபைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ரூ. 1 லட்சத்துக்கு ஒரு வருடத்தில் கூடுதலாக ரூ. 82,000 தரப்படும் என அறிவித்து நிதி வசூல் செய்துவந்தனர். இதற்காக முக்கியஸ்தர்கள் சிலரை ஏஜென்ட்டுகளாக நியமித்து பணம் வசூல் செய்தனர். தொடக்கத்தில் சரியாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததால் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸிடம் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.

புகார் அளித்த ஜபருல்லா - பைரோஜ்பானு
புகார் அளித்த ஜபருல்லா - பைரோஜ்பானு

பெரும்பாலும் கறுப்புப் பணம் வைத்திருந்தவர்களே அவர்களிடம் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. வசூல் செய்த பணத்தை வெளிநாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தந்ததாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர், சொகுசு கார்கள் என இருவரும் ஆடம்பரமாக வலம்வந்தனர். பின்னர் எம்.ஆர்.கணேஷ் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட வர்த்தகத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. கும்பகோணத்துக்கு வரும் பா.ஜ.க பிரமுகர்கள் பலர் அவர்கள் வீட்டுக்குச் சென்றும் வரும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்களாக வலம்வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் கடந்த ஆண்டிலிருந்தே முதலீடு செய்தவர்கள் யாருக்கும் பணம் சரியாகத் திருப்பித் தரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்து அடங்கியது. இந்தநிலையில், கடந்த வாரம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ்பானு தம்பதியர் தங்களிடம் ரூ.15 கோடி வாங்கிக்கொண்டு ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தனர்.

போஸ்டர்
போஸ்டர்

இதையடுத்து கும்பகோணம் நகரம் முழுவதும் `மெகா மோசடி’ என, `ஹெலிகாப்டர் பிரதர்ஸ் ரூ.600 கோடி மோசடி’ செய்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் எம்.ஆர்.கணேஷை பா.ஜ.க-விலிருந்து நீக்குவதாகவும் அந்தக் கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து சகோதர்கள் மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த இரு நாள்களாக கும்பகோணத்தில் எம்.ஆர்.கணேஷ் வீடு, நிதி நிறுவனம், பால்பண்ணை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், தலைமறைவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனைக் கைது செய்ய ஏழு தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர். மேலும் அவர்களிடம் மேனேஜராக இருந்த ஸ்ரீகாந்த் என்பவரையும் கைதுசெய்தனர்.

போலீஸ் பறிமுதல் செய்துள்ள கார்கள்
போலீஸ் பறிமுதல் செய்துள்ள கார்கள்

இந்தநிலையில், எம்.ஆர்.கணேஷ் தரப்புக்கு இருபதுக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. கார்கள் நிறுத்துவதற்கு என்றே ஒரு வீட்டை ஷெட்டாகப் பயன்படுத்திவந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீஸார் வீட்டிலிருந்த இரண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் உள்ளிட்ட 12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து தஞ்சாவூர் டி.ஐ.ஜி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். மேலும் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 “பிரமாண்ட இமேஜ்... கோடிகளில் மோசடி!” - சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது புகார் வந்த நிலையில், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சகோதரர்கள், அவர்களிடம் பணி செய்த சிலருடன் தலைமறைவாக உள்ளனர். அனைவரது செல் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டிலிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் ரூ 8 கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் அவர்களது வங்கிக் கணக்கை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விரைவில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்” எனவும் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு