Published:Updated:

திருவள்ளூர்: ரெய்டில் சிக்கிய 18,550 லிட்டர் எரிசாராயம்! - கடத்தல் கும்பலை வளைத்த போலீஸ்

 பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்

தனியாருக்குச் சொந்தமான குடோனில் டேங்கர் லாரிகள் மூலம் மொத்தமாக எரிசாராயத்தைக் கொண்டு வந்து இருப்பு வைத்துக்கொண்டு, அங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குத்  தேவைக்கேற்ப சப்ளை செய்திருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தப்பட்டுவருவதாக, சென்னை மாநகர மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து , டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வெங்கல் பகுதிக்குச் சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று போலீஸாரைக் கண்டவுடன் திரும்பி வேறு வழியாகச் செல்ல முயன்றது. திரும்பித் தப்பிக்க முயன்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களை கீழே இறக்கி விசாரித்தனர். அப்போது, காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் காரை பறிமுதல் செய்து அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

காவல்துறை வாகன சோதனை
காவல்துறை வாகன சோதனை
Representational Image

விசாரணையில், காரில் இருந்தவர்கள் அனைவரும் காரணி பாட்டை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் எரிசாராயம் வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, போலீஸார் அம்பத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 34), கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (33), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஆரிஸ் (42), திருவொற்றியூரைச் சேர்ந்த ரவி (38), திருமுல்லைவாயலைச் சேர்ந்த மதன் (41), மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த பாபு (34) ஆகிய ஆறு பேரை வழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் காரணி பாட்டை பகுதியில் பக்தவத்சலம் என்பவருக்குச் சொந்தமான சேமிப்பு குடோனைச் சோதனையிட்டனர். அப்போது, குடோனில் 35 லிட்டர் கொள்ளளவுகொண்ட 530 கேன்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18,550 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், எரிசாராயக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன், கைதுசெய்யப்பட்டிருக்கும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

கைது
கைது
representational image

சம்பவம் குறித்து வெங்கல் போலீஸாரிடம் பேசினோம். ``சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் கூட்டாக இந்தக் கடத்தலைச் செய்துவந்திருக்கிறார்கள். தனியாருக்குச் சொந்தமான அந்த குடோனில் டேங்கர் லாரிகள் மூலம் மொத்தமாக எரிசாராயத்தைக் கொண்டு வந்து இருப்பு வைத்துக்கொண்டு, அங்கிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப சப்ளை செய்துவந்திருக்கிறார்கள். கடத்தல் கும்பலுக்கு குடோனை வாடகைக்கு விட்ட குடோன் உரிமையாளர் பக்தவத்சலம் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இந்த எரிசாராயம் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆலைகளிலிருந்து கொண்டுவரப்பட்டதா... இல்லை அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்டதா என்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு