Published:Updated:

மீஞ்சூர்: பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 6 டன் குட்கா! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் வெளிமாநிலங்களிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாகக் கொண்டுவரப்பட்டு, சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், கடத்தல்காரர்கள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை கிராமங்கள் வழியாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எனக் கொண்டுவந்து பின்னர், அங்கிருந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்துவருகின்றனர். அண்மையில், தமிழக அரசு குட்கா, போதை வஸ்துகள் ஆகியவை விற்பனை தொடர்பான சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. அந்த வகையில், குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீஞ்சூர் வழியாகத் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், நேற்றைய தினம் குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் தனிப்படை போலீஸார் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குட்கா மூட்டைகள்
குட்கா மூட்டைகள்
மாதிரி படம்

அப்போது, பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இரண்டு கன்டெய்னர் லாரிகளிலிருந்து சிலர் சந்தேகத்துக்கு இடமான வகையில் மினி லாரிகளுக்கு சில மூட்டைகளை மாற்றிக்கொண்டிருந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சாகுல் ஹமீதும் அவரின் குழுவினரும், கன்டெய்னர் மற்றும் மினி லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில், வெள்ளை நிற பிளாஸ்டிக் கோணிகளில் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருந்தன. அதைத் தொடர்ந்து, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 6 டன் எடை கொண்ட குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைதுசெய்து மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

திருவள்ளூர்: `6 மாதங்களில் 11,389 கிலோ பறிமுதல்; தகவலுக்கு சன்மானம்' - குட்கா தடுப்பு நடவடிக்கை
மீஞ்சூர் காவல் நிலையம்
மீஞ்சூர் காவல் நிலையம்

அதில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீஞ்சூரை அடுத்த நாகப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (30), புது கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (30) என்பது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்பேரில், மீஞ்சூரிலுள்ள தனியார் குடோன்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். ஆனால், குட்கா பொருள்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து, குட்கா கடத்தலின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு