Published:Updated:

`நாட்டுத் துப்பாக்கிகள்; வீச்சரிவாள்!' - போலீஸாரை அதிரவைத்த கமுதி கிராமம்

போலீஸ் கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கி
போலீஸ் கைப்பற்றிய நாட்டுத் துப்பாக்கி ( உ.பாண்டி )

ஓ.கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயராமன் மனைவி ராஜாமணியும், பாண்டி என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில் ராஜாமணி வென்றுள்ளார். இதை எதிர்த்து தோல்வியடைந்த பாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட இருந்ததை அறிந்த போலீஸார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து மோதலின்போது பயன்படுத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்றினர்.

ஆயுதங்கள்
ஆயுதங்கள்

கமுதி கோவிலாங்குளம் அருகே உள்ள கிராமம் தோப்படைப்பட்டு. இங்கு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாடானை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையில் போலீஸார் தோப்படைப்பட்டு கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆயுதங்களைப் புதைத்து வைத்திருக்கலாம் எனக் கருதிய போலீஸார் மணல் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டும் குழிபறித்து ஆயுதங்களைத் தேடிவந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தச் சோதனையின்போது தோண்டப்பட குழிகளிலிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 வீச்சரிவாள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து செல்வகுமார், ராமலிங்கம், முருகன், அந்தோணி, ஆத்திமுத்து, செல்வமேரி ஆகிய 6 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓ.கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயராமன் மனைவி ராஜாமணியும், பாண்டி என்பவரும் போட்டியிட்டுள்ளனர். இதில், ராஜாமணி வென்றுள்ளார். இதை எதிர்த்து தோல்வியடைந்த பாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில் பாண்டி தரப்பினைப் பழிவாங்குவதற்காகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ராஜாமணி தரப்பினர் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காரணமாக கமுதி பகுதியில் அவ்வப்போது மோதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல