Published:Updated:

`கண்ணைக் கட்டி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்!' - கோவில்பட்டி ரவுடி கதறல்

சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா
சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா

தூத்துக்குடியில் போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ்நகரைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா. இவர் மீது கோவில்பட்டி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் ஒருமுறை கொலை செய்யச் சென்றபோது சம்பந்தப்பட்ட நபர் இல்லாததால் வீட்டிலிருந்த அந்த நபரின் தாயை வெட்டிக் கொன்றுவிட்டார்.

வெட்டபட்ட போலீஸார்
வெட்டபட்ட போலீஸார்

அந்த அளவிற்குக் கொடூரமாக நடந்து கொண்ட ரவுடி என போலீஸார் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலி பட்டாசு ஆலை நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், இன்று கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் அருகில் உள்ள கார்த்திகைபட்டி கிராமத்தில் மாணிக்கராஜாவுக்குச் சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

காதல் மனைவியின் கட்டளை; மிரட்டிய கொலை, கொள்ளை வழக்குகள்! - ரவுடி மணிகண்டன் `என்கவுன்டர்' பின்னணி

இதையடுத்து கோவில்பட்டி துணை காவல் கோட்டத்துக்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் காவலர்கள் அருண்குமார் செந்தில்குமார் செல்வகுமார், முகமது மைதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணிக்கராஜாவின் தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸாரைப் பார்த்த மாணிக்கராஜா தப்பிக்க முயன்றதாகவும், போலீஸார் அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, போலீஸாரை அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா
சுடப்பட்ட ரவுடி மாணிக்கராஜா

இதில், போலீஸார் செல்வகுமார், முகமது மைதீன் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணிக்கராஜாவின் வலது காலுக்குக் கீழ் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த மாணிக்கராஜாவை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த போலீஸார் செல்வகுமார் மற்றும் முகமது மைதீன் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவுடி மாணிக்கராஜாவை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, ரவுடிகளைக் கண்டித்தும் எச்சரித்தும் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மாணிக்கராஜாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லும் போது மீடியாக்களிடம் கதறியபடியே, ``கோவில்பட்டி பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள ஜவுளிக்கடை முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னை நோக்கி வந்த 4 போலீஸார் வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி கார்த்திகைப்பட்டியில உள்ள என்னோட தோட்டத்திற்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. கண்ணையும் வாயையும் துணியால கட்டி காலில் துப்பாக்கியால் சுட்டாங்க.

உதவி ஆய்வாளர் இசக்கிராஜா
உதவி ஆய்வாளர் இசக்கிராஜா

என் மீது 58 வழக்குகள் இருப்பதாக போலீஸார் சொல்றாங்க. ஆனா, 43 வழக்குகளில் விடுதலை ஆகிவிட்டேன். என்னைச் சுட வேண்டிய காரணம் என்ன?” என்றவர் இறுதியாக, ``நான் தி.மு.கவின் அடிமட்ட தொண்டன். என்னோட தம்பி கட்சியில பொறுப்புல இருக்கான். தி.மு.க அடிமட்ட தொண்டனுக்கே இந்த நிலை என்றால் என்ன ஆவது. இதை நான் சும்மா விட மாட்டேன்” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே போலீஸார் அவரைப் பேச விடாமல் தடுத்து அழைத்துச் சென்றனர். வலது மூட்டுப் பகுதியில் பாய்ந்த குண்டினை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுவிட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு