ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்தயிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் எட்டு தையலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த எஸ்.ஐ.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கீழரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக கல்லக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீஸார் கீழரசூர் கிராமத்திற்குச் சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து ப்ளக்ஸ் போர்டுகள் மற்றும் பலகைகளை அப்புறப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், ஊர் மக்கள் அதனையும் மீறி மதியம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதை தெரிந்துகொண்ட போலீஸார் இரண்டாவது முறையும் சென்று அவர்களைக் கலைந்து போகச் சொல்லியிருக்கின்றனர். மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த எஸ்.ஐ இளங்கோவன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று தடுத்தபோது ஊர்மக்கள் அவர் மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

அதில் இளங்கோவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போட்டுள்ளனர். லால்குடி பொறுப்பு டி.எஸ்.பி நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாருதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, போலீஸாரை தாக்கியவர்களைத் தேடிவருகின்றனர். அத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்தவர்கள் மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாமா? சட்டத்தை மீறி நடத்துவது தவறு தானே. போட்டி நடத்துவதாக தகவல் வந்ததும் எஸ்.ஐ அங்குச் சென்று இரண்டு மூன்று முறை சொல்லி எச்சரித்துவிட்டு வருகிறார்.

அதையும் தாண்டி செய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இதே போல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, இதே கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினார்கள். அதைத் தடுக்க சென்ற அப்போதைய லால்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இவர்கள் தொடர்ந்து போலீஸாரை தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்" என்றனர் காட்டமாக.