Published:Updated:

`அலர்ட்டாக இருக்க வேண்டியவரிடமே அபேஸ்!'- 1 லட்ச ரூபாயை இழந்த ராமநாதபுரம் போலீஸ் எஸ்.ஐ

`` உங்களது கனரா வங்கி ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும். எனவே, கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைக் கூறுங்கள்'' எனக் கேட்டதுடன் ஓ.டி.பி எண்ணையும் கேட்டுள்ளார்.

மோசடி மூலம் பணம் திருட்டு
மோசடி மூலம் பணம் திருட்டு

`வங்கிக் கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் திருடும் கொள்ளையர்களிடம் விழிப்புடன் இருங்கள்' எனக் காவல்துறையினர் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஒருவரே கொள்ளையர்களிடம் பணத்தைப் பறிகொடுத்து இருப்பது ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பணப்பரிமாற்றத்தை இலகுவாகக் கையாளும் வகையில் அனைவரும் மின்னணு பரிவர்த்தனை செய்யுமாறு மத்திய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள், அரசு உதவியைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவரும் தொழில்நுட்ப கொள்ளையர்கள், பாமர மக்களைப் போன் மூலம் தொடர்புகொண்டு அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அந்தக் கணக்கில் இருக்கும் தொகையைச் சுருட்டி வருகின்றனர்.

இதுபோன்ற நூதன திருட்டுக்கு பாமரர் மட்டுமல்ல படித்தவர்களே பலமுறை ஆளாகியுள்ளனர். இதைத் தடுக்க காவல் துறையும் வங்கி நிர்வாகங்களும் தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இந்த மின்னணு திருட்டுக் கும்பலிடம் தனது பணத்தைப் பறிகொடுத்திருக்கிறார்.

ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றுபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். கடந்த மாதம் ஏ.டி.எம்-மின் பின் நம்பர் மூலம் பணத்தை இழந்த நபர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளார்.

அந்நேரத்தில், இவரை செல்போனில் தொடர்பு கொண்ட அறிமுகம் இல்லா நபர் ஒருவர், 'உங்களது கனரா வங்கி ஏ.டி.எம் கார்டைப் புதுப்பிக்க வேண்டும். எனவே, கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைக் கூறுங்கள்' எனக் கேட்டதுடன் ஓ.டி.பி எண்ணையும் கேட்டுள்ளார். இதை உண்மை என நம்பிய கிருஷ்ணமூர்த்தி தனது வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கூறியுள்ளார்.

போலீஸ் எஸ்.ஐ கணக்கு வைத்துள்ள வங்கி
போலீஸ் எஸ்.ஐ கணக்கு வைத்துள்ள வங்கி

இந்நிலையில், இவரது வங்கிக் கணக்கிலிருந்து 4 தவணைகளில் ரூ.99,968 பணம் எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. ஆனால், பணத்தை எடுக்காத கிருஷ்ணமூர்த்தி இந்த மெசேஜால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளார். அப்போதுதான் தனது பணம் களவாடப்பட்ட விவரத்தை அவர் அறிந்துள்ளார்.

இதையடுத்து தான் பணியாற்றி வரும் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திலேயே இதுகுறித்துப் புகார் செய்துள்ளார். பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தும் காவல்துறை சார்பு ஆய்வாளரே மின்னணு திருடர்களிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.