Published:Updated:

ரூ.200 மாமூல்... முகத்தில் கத்திக்குத்து... 35 தையல்கள்... தாக்கியது தாதா அல்ல... போலீஸ் எஸ்.ஐ!

கத்திக்குத்து
பிரீமியம் ஸ்டோரி
கத்திக்குத்து

நான் பேசிக்கிட்டிருக்குறப்பவே எதுத்து பேசிறியா?’ன்னு சொல்லி என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சாரு. உடனே நான் ‘எதுக்கு சார் தேவையில்லாம மேல கையைவெக்குறீங்க?’

ரூ.200 மாமூல்... முகத்தில் கத்திக்குத்து... 35 தையல்கள்... தாக்கியது தாதா அல்ல... போலீஸ் எஸ்.ஐ!

நான் பேசிக்கிட்டிருக்குறப்பவே எதுத்து பேசிறியா?’ன்னு சொல்லி என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சாரு. உடனே நான் ‘எதுக்கு சார் தேவையில்லாம மேல கையைவெக்குறீங்க?’

Published:Updated:
கத்திக்குத்து
பிரீமியம் ஸ்டோரி
கத்திக்குத்து

அராஜகம் செய்வதில் தாதாக்களையும் ரெளடிகளையுமே மிஞ்சிவிடுகிறார்கள் காவல்துறையினர் சிலர். அதுவும் அப்பாவிகளிடம் அவர்கள் காட்டும் புஜபலமே தனி... இப்படி சாமானியர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவது தொடங்கி லாக்அப் மரணங்கள் வரை போலீஸார் செய்துவரும் அராஜகங்களுக்கு இதுவரை முடிவு கட்டப்படவில்லை. இந்த நிலையில்தான், சென்னை தாம்பரத்தில் 200 ரூபாய் மாமூல் கொடுக்கவில்லை என்று கூறி, சாலையோரம் பூக்கடை நடத்திவரும் வெங்கடேஷ் என்பவரை முகத்தில் கத்தியால் குத்திக் கிழித்திருக்கிறார் சேலையூர் போலீஸ் எஸ்.ஐ மணிவண்ணன். வெங்கடேஷின் முகத்தில் மருத்துவர்கள் 35 தையல்கள் போட்டிருக்கிறார்கள் என்பதைவைத்தே எஸ்.ஐ நடத்திய தாக்குதலின் கொடூரத்தை உணர முடியும்!

ரூ.200 மாமூல்... முகத்தில் கத்திக்குத்து... 35 தையல்கள்... தாக்கியது தாதா அல்ல... போலீஸ் எஸ்.ஐ!

தாம்பரம், சானடோரியம் இந்திரா நகரில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரும் இவரின் அண்ணன், அண்ணி ஆகியோரும் சானடோரியம் பகுதியில் சாலையோரம் பூக்கடை நடத்திவருகின்றனர். பூக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், வெங்கடேஷ் பூக்கடையை கவனித்துக் கொண்டே அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டிவருகிறார். இவர்களின் பூக்கடையை ஒட்டி போலீஸ் பூத் இருக்கிறது. அதையும் இவர்கள்தான் சுத்தம் செய்துவந்தார்கள். அதன் சாவியும் இவர்களிடம்தான் ஒப்படைக் கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் வெங்கடேஷ் மீது இப்படி யொரு கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கிறார் போலீஸ் எஸ்.ஐ மணிவண்ணன். அன்றைய தினம் என்னதான் நடந்தது என்று வெங்கடேஷிடம் கேட்டோம்...

இடது பக்க கன்னத்தில் கண்ணிலிருந்து வாய் வரை தையல்கள் போடப்பட்டிருந்த நிலையில் மெதுவாக, திணறித்தான் பேசினார் வெங்கடேஷ்... “கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க கடைக்கு வந்த சேலையூர் எஸ்.ஐ மணிவண்ணன், ‘இங்க கடையைப் போடணும்னா தினமும் 200 ரூபாய் மாமூல் தரணும்னு சொல்லியிருக்காரு. அப்ப நான் கடையில இல்லை... எங்க அண்ணனும் அண்ணியும்தான் இருந்திருக்காங்க. இந்தத் தகவலை அண்ணி என்கிட்ட சொன்னப்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இத்தனை வருஷமா இங்க பூக்கடை போட்டிருக்கோம். போலீஸ் யாரும் மாமூல் கேட்டதில்லை... மாமூல் கொடுக்குற அளவுக்கு எங்களுக்கு வருமானமும் இல்லை. ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்குத்தான் பூவே விக்கும். இதுல எங்கே 200 ரூபாய் மாமூல் கொடுக்குறதுன்னு ஒரே யோசனையா இருந்துச்சு.

ரூ.200 மாமூல்... முகத்தில் கத்திக்குத்து... 35 தையல்கள்... தாக்கியது தாதா அல்ல... போலீஸ் எஸ்.ஐ!

இந்த நிலைமையில்தான் பிப்ரவரி 19-ம் தேதி நான் கடையில இருந்தப்ப அங்க வந்த எஸ்.ஐ மணிவண்ணன், அண்ணிகிட்ட மாமூல் கேட்டார். உடனே நான் எஸ்.ஐ-கிட்ட எங்க வறுமையான சூழ்நிலையை எடுத்துச் சொன்னேன். அதைக் காதுலயே வாங்கதவரு, ‘நான் பேசிக்கிட்டிருக்குறப்பவே எதுத்து பேசிறியா?’ன்னு சொல்லி என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சாரு. உடனே நான் ‘எதுக்கு சார் தேவையில்லாம மேல கையைவெக்குறீங்க?’ன்னு கேட்டதுக்கு ‘ஏன்டா... நீ என்ன பெரிய ரெளடியா? டிராஃபிக்குக்கு இடைஞ்சலா கடையைவெச்சுக்கிட்டு, நியாயம் பேசுறியா நீ...’னு சொல்லி, பூவையெல்லாம் ரோட்டுல தூக்கி வீசுனாரு. அதை என் அண்ணி தடுத்தப்ப, பொம்பளைன்னுகூட பார்க்காம தகாத வார்த்தையால திட்டினாரு. அதை நான் தட்டிக் கேட்டப்பதான், அவரோட கீ செயின்ல இருந்த பேனா கத்தியை எடுத்து என்னோட இடதுபக்க கண்ணுல இருந்து வாய் வரைக்கும் குத்திக் கிழிச்சுட்டாரு. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில எனக்கு 35 தையல்கள் போட்டாங்க. பிறகு மேல் சிகிச்சைக்கு எக்மோர் அரசு கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டாங்க.

ரூ.200 மாமூல்... முகத்தில் கத்திக்குத்து... 35 தையல்கள்... தாக்கியது தாதா அல்ல... போலீஸ் எஸ்.ஐ!

கத்தியில குத்துனதுல கண்ணுல ரொம்ப வலிக்குது. பார்வையும் மங்கலாகிட்டே வருது. காயமெல்லாம் ஆறினால்தான் கண்ணை செக் பண்ண முடியும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எஸ்.ஐ மேல நடவடிக்கை எடுக்கணும்னு சேலையூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கேன். மாநில மனித உரிமை ஆணையத்துக்கும் மனு அனுப்பியிருக்கேன். 40 வருஷத்துக்கு மேல அந்த இடத்துல பூக்கடை நடத்திட்டுவர்றோம். எங்களால யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. ஆனா, மாமூல் கொடுக்கலைன்னு என் முகத்தை சிதைச்சுட்டாரு அந்த எஸ்.ஐ” என்றார் கண்ணீருடன்.

இந்தச் சம்பவத்தை அடுத்து எஸ்.ஐ மணிவண்ணனை சஸ்பெண்ட் செய்துள்ள தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி, இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். சேலையூர் போலீஸார் சிலரிடம் இது பற்றிக் கேட்டபோது, ``வெங்கடேஷ், இரவு நேரத்தில் விற்காத பூக்களை போலீஸ் பூத்தில் வைத்திருந்ததை போலீஸ் எஸ்.ஐ மணிவண்ணன் கண்டித்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறில்தான் இப்படி நடந்திருக்கிறது” என்பதுடன் முடித்துக்கொண்டனர்.

மணிவண்ணன்
மணிவண்ணன்

பிரச்னை எதுவாக இருந்தாலும் கத்தியால் குத்துவதற்கு போலீஸாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்... இதுவரை சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-யை ஏன் கைதுசெய்யவில்லை காவல்துறை? ஏழைகள் என்றாலே இளக்காரம்தானா!