Published:Updated:

`மூணு நாளா எங்களுக்கு நல்ல வசூல் வேட்டை!' - உதவி ஆய்வாளரை சிக்கவைத்த மாமூல் ஆடியோ

பாலூர் காவல் நிலையம்
பாலூர் காவல் நிலையம்

`அட பைத்தியக்காரா… நான் பொய் சொல்லல. நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது. உண்மையிலேயே ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 1,000 ரூபாய் கொடுத்துட்டு ஓட்டுறாங்க.'

`மருதமலை' படத்தின் வடிவேலுவையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்குக் காவல்துறையில் உள்ள சிலரின் செயல்பாடுகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருவதுண்டு. அந்த வரிசையில் செங்கல்பட்டு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மாமூலுக்கு அட்வான்ஸ் கேட்டு நச்சரிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. `மாமூலுக்குக்கூட அட்வான்ஸ் கேப்பாங்களா?' என நெட்டிசன்கள் அந்தச் சம்பவத்தை ரவுண்டு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது கட்டுமானப் பணிகள் மற்றும் கல்குவாரிகள் செயல்படுவதற்கு தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பான முறையில் குறைந்த நபர்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெறலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. பாலாற்றில் மணல் எடுக்கத் தடை நீடிப்பதால், பெரும்பாலான கட்டுமானப் பணிகள் எம் சாண்ட் பயன்படுத்தியே நடைபெற்று வருகின்றன.

எம்சாண்ட்
எம்சாண்ட்

கட்டுமான நிறுவனங்கள் தற்போது பணியைத் தொடங்கியதால், `நிலுவையில் உள்ள ஆர்டர்களை உடனே அனுப்ப வேண்டும். இல்லையென்றால் வெளிமாவட்டங்களிலிருந்து எம்சாண்ட் வாங்கிக் கொள்வோம்’ எனக் கிரஷர்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கின. இதையடுத்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்குக் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கிரஷர்களிலிருந்து லாரிகள் மூலமாக எம்சாண்ட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திருமுக்கூடல், மதூர், சாலவாக்கம், மாகரல் போன்ற பகுதிகளிலிருந்து வரும் லாரிகள் பாலூர் காவல்நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வழக்கம் போலச் செயல்படத் தொடங்கியுள்ளன.

மணல் லாரிகள்
மணல் லாரிகள்

பாலூர் காவல் நிலையத்திலுள்ள சிலர் வழக்கம்போல தங்கள் வாடிக்கையாளர்களிடம் மாமூல் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில் பாலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாபு என்பவர் லாரி டிரைவர் ஒருவரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`விபத்தில் யாராவது இறந்தாலும் லஞ்சம் கேட்பார்!' -டிஎஸ்பி மீது சேலம் இன்ஸ்பெக்டரின் `பகீர்' புகார்

பாலூர் காவல் உதவி ஆய்வாளர் பாபுவும் லாரி ஓட்டுநரும் பேசிக் கொள்ளும் ஆடியோவில் இருப்பது இதுதான்…

``நீ எந்த மாசம் வேணும்னாலும் கணக்கு பண்ணிக்கோ, நீ எந்த வழியா போகணும்னாலும் போலீஸ் ஸ்டேஷன் வழியாத்தான் போகணும்.“

``எல்லாரும் திங்கள்கிழமையில இருந்து ஓட்டுறாங்க சார். நாங்க இன்னைக்குதான் வண்டி எடுத்திருக்கோம் சார்.“

``அவங்க சும்மா ஓட்டுறதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு `1,000 ரூபாய் கொடுத்து ஓட்டுறாங்க.“

``ஒரு நாளைக்கு, ஒரு வண்டி ஓட்டினாலே 1,000 ரூபாய்தான் சார் கிடைக்கும்.“

உதவி ஆய்வாளர் பாபு
உதவி ஆய்வாளர் பாபு

``அட பைத்தியக்காரா… நான் பொய் சொல்லல! மூணு நாளா எங்களுக்கு நல்ல வசூல் வேட்டைதான். நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் கிடையாது. உண்மையிலேயே ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 1,000 ரூபாய் கொடுத்துட்டு ஓட்டுறாங்க. உன்கிட்ட பொய் சொல்லணும்னு அவசியம் கிடையாது.“

``நான் ஓனர்கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்.“

``நீ ஓனர்கிட்ட பேசிடு… டோக்கன் அட்வான்ஸ் பாபு ஐயாகிட்ட கொடுக்கணுமாம். டோக்கன் அட்வான்ஸ் இல்லைன்னா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லிடு.“

``பேசுறேன் சார்.“

``நான் மெயின் ரோட்டுலதான் நின்னுகிட்டு இருக்கேன். வண்டி வந்தா மடக்கிடுவேன்.''

``பார்த்து பண்ணிடுறேன் சார். இதுவரைக்கும் பண்ணாம விட்டிருக்கேனா?“

- இப்படியாக முடிகிறது அந்த ஆடியோ. இதுகுறித்து பாலூர் உதவி காவல் ஆய்வாளர் பாபுவிடம் பேசினோம். ``இது பொய்யான தகவல் சார். இதனால என்னை சஸ்பெண்ட் செய்திருக்காங்க” என்றதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு