Published:Updated:

முகமூடி அணிந்த 2 பேர்; கைத்துப்பாக்கி! - களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.எஸ்.ஐக்கு நேர்ந்த துயரம்

அந்தப் பகுதி வழியாக நடந்துவந்த இரண்டு பேர் கைத்துப்பாக்கியால் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை நான்கு முறை சுட்டனர்.

துப்பாக்கி சூட்டில் பலியான போலீஸ்
துப்பாக்கி சூட்டில் பலியான போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு நுழையும் சாலைகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீஸார் பணியில் இருப்பார்கள். கேரள எல்லையான களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையின் பின்பகுதி வழியாக கேரளா செல்லும் அணுகுசாலை உள்ளது.

சோதனைச் சாவடி
சோதனைச் சாவடி

இங்குள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வில்சன் (58) என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பணியில் இருந்தார். நேற்று இரவு 9.45 மணியளவில் திடீரென அந்தப் பகுதி வழியாக நடந்துவந்த இரண்டு பேர் கைத்துப்பாக்கியால் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை நான்கு முறை சுட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் அந்தப் பகுதியின் எதிரே இருந்த பள்ளிவாசல் வழியாக தப்பி ஓடியுள்ளனர்.

`போலீஸ் டெம்போ முன் டிக்டாக்; மன்னிப்பு!' - மாணவர்களுக்குத் தூத்துக்குடி காவல்துறையின் நூதன தண்டனை

துப்பாக்கிச்சூடு காரணமாக ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சனை அங்கிருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மருத்துவமனை
மருத்துவமனை

சிறப்பு உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட நபர்கள் முகமூடி அணிந்து வந்திருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியபிறகு ஓடிச்சென்ற அந்த இரண்டு நபர்களும் முகமூடியைக் கழற்றும் சிசிடிவி வீடியோ காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு வடநரே ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி தொடங்கி, கனிமவளங்கள் போன்றவை கடத்தப்படுவது வாடிக்கை.

பொம்மைத் துப்பாக்கி
பொம்மைத் துப்பாக்கி

அதுபோன்ற கடத்தல் கும்பலுக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க இரவு முழுவதும் போலீஸார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டனர். வாகன சோதனைகளும் நடந்தன. அதில் நாகர்கோவில் அருகே வழுக்கம்பாறை பகுதியில் சொகுசு காரை சோதனை செய்ததில் பொம்மை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.