Published:Updated:

`உயிருடன் எரிக்கப்பட்டாரா ஹைதராபாத் பெண் மருத்துவர்?!' -சிறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த 4 பேர்

பெண் மருத்துவர் கொலை சம்பவம் வெளிவந்ததும் அவர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டாரா என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப்
கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப் ( twitter )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்தவாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். `இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கையுடன் தெலங்கானாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் வெளிவந்ததும் அவர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டாரா என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பில், `அவர் இறந்தபின் எரித்துக்கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நாங்கள் யூகிக்கிறோம். விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும்' என்று தெரிவித்திருந்தனர்.

ஹைதராபாத் பெண் மருத்துவர்
ஹைதராபாத் பெண் மருத்துவர்

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்களை உள்ளூர் ஊடகமான naidunia செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள போலீஸார், ``பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டியுள்ளனர். பின்னர், மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர்.

கிட்னி பாதிப்பு; டயாலிசிஸ் சிகிச்சை..!- ஹைதராபாத் வழக்கில் கைதானவர்களை சந்திக்க மறுத்த பெற்றோர்

பெண் மருத்துவர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லாரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண் உயிருடன் இருந்தது தங்களுக்குத் தெரியவந்தது என்றும், அதுவரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், முதலில் பெண் மருத்துவரை கொல்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை. போலீஸிடம் புகார் கொடுப்பார் என்று நினைத்தே பெண்ணைக் கொலை செய்ததாக நால்வரும் கூறியுள்ளனர்" என்கின்றனர்.

எனினும், `பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இந்த விவகாரத்தில் எதையும் சொல்ல முடியும்' என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கால்நடை பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இடம்
கால்நடை பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இடம்

இதற்கிடையே, பெண் மருத்துவர் மரணத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கண்டுகொள்ளவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது. கொலைச் சம்பவம் நடந்தபோது டெல்லியில் இருந்த சந்திரசேகர் ராவ் செவ்வாய்க்கிழமைதான் தெலங்கானா வந்துள்ளார். அப்போதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இதுவரை பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கவில்லை.

`ஆறுதல் தெரிவிப்பதற்காக அப்பெண்ணின் குடும்பத்திடம் போனில் பேசியிருக்கலாம். ஆனால், அதைக்கூட முதல்வர் செய்யவில்லை. மாறாக டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு இதுவரை மூன்று கல்யாண நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார் சந்திரசேகர் ராவ். இதை வைத்து பெண் மருத்துவர் மரணத்தை முதல்வர் கண்டுகொள்ளவில்லை' எனத் தெலங்கானா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

`2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்!' -பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி