Published:Updated:

நடுநிசி ஆபரேஷன்; சிக்கிய 2,512 ரௌடிகள்! - டிஜிபி சைலேந்திரபாபுவின் அடுத்த ஸ்கெட்ச்?

தமிழகத்தில் கொடூரமாக தலையை துண்டித்து நடந்த கொலைகளையடுத்து ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் தலையை துண்டித்து நடந்த கொலை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் பழிக்குப் பழியாக ரௌடிகளுக்குள் நடக்கும் மோதலே முக்கிய காரணம் தெரியவந்தது. அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து சில தினங்களுக்கு முன் சட்டம் ஒழுங்கு குறித்தும் புதியதாக அமையுள்ள ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் storming operation-ஐ நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த ஆபரேஷனில் தமிழக காவல்துறையினர் டீம், டீமாகப் பிரிந்து ஈடுபட்டனர். அப்போது ரௌடிகள் நெட்வொர்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்நாள் சோதனையில் தமிழகம் முழுவதும் 700 -க்கும் மேற்பட்ட ரௌடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரௌடிகள்
ரௌடிகள்

இதையடுத்து 2-வது நாளாக நேற்றிரவும் இந்த ஆபரேஷன் தொடர்ந்தது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,512 ரௌடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். இதில் 733 ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனையில் ஈடுபட டிஜிபி சைலேந்திரபாபு இன்று நெல்லை சென்றார். அங்கு மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த ஆபரேஷன் தொடர வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். ``ரௌடிகளைப் பொறுத்தவரை ஏ பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகை ரௌடிகள் குறித்து ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில்தான் `storming operation’ நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களை ஏற்கெனவே ரௌடிகள் தடுப்பு பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீஸார் The Organised Crime Intelligence Unit (OCIU) நுண்ணறிவு பிரிவு, உளவுப்பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரௌடிகள், அவர்களின் கூட்டாளிகளின் நடவடிக்கைகள், தலைமறைவாக இருக்கும் ரௌடிகள், கூலிப்படையினர் என அனைவரும் கண்காணிக்கப்பட்டாலும் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களில் பலர், இளம் தலைமுறையினர் என்பதால்தான் தமிழகத்தில் தொடர்ந்து கொடூர கொலைச் சம்பவங்கள் நடந்தன.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை

அதனால் ரௌடிகளின் தொடர்புள்ள இத்தகைய முதல்தடவை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அரிவாள், கத்திகளை தூக்கியிருக்கின்றனர். பசுபதி பாண்டியன் கொலைக்குப் பழிக்குப்பழியாக நிர்மலா என்ற பெண்ணின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 21 வயது. தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை சமுதாய மோதல் தொடர்பான கொலைகள் தொடர்கதையாக நடந்துவருகின்றன. அதனால் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தாலே ஓரளவு குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் என நம்புகிறோம். அதனால்தான் இந்த ஆபரேஷன் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக இருப்பவர்களையும் விரைவில் கைது செய்துவிடுவோம். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்" என்றனர்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு:  `அரசு பள்ளியில் படித்தவர்.. ரௌடிகளுக்கு சிம்ம சொப்பனம்!’ -முழு பின்னணி
கமிஷனர் சங்கர் ஜிவால்
கமிஷனர் சங்கர் ஜிவால்

சென்னையை பொறுத்தவரை 23-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி காலை வரை நடந்த storming operation-ல் 716 ரௌடிகள், பழைய குற்றவாளிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டன. அதில் கொலை வழக்கில் தொடர்புபடைய 57 பேரும் இதர வழக்கில் தொடர்புடைய 13 பேரும் என 70 பேரை கைது செய்திருக்கிறோம். இவர்களிடமிருந்து 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 18 குற்றவாளிகளிடமிருந்து பிணையபத்திரம் மூலம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டிருக்கிறது என கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு