Published:Updated:

`மனோலி தீவில் கிடந்த 8.30 கிலோ வெடிமருந்துப் பெட்டி'- ராமநாதபுரம் அதிர்ச்சி!

பெட்டி
பெட்டி

தங்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள், கன்னிவெடிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றது போக எஞ்சியவற்றை ஆங்காங்கே மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சென்றனர்.

மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள மனோலி தீவில் கிடந்த வெடிமருந்து பெட்டி ஒன்றை போலீஸார் கைப்பற்றினர். இது இலங்கை விடுதலைப்புலிகள் செயல்பாட்டில் இருந்தபோது பயன்படுத்தியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய  தீவுகள்
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தீவுகள்
விகடன்

இலங்கையில் தனிநாடு கேட்டு ஆயுதப் போரில் ஈடுபட்டவந்த போராளி இயக்கங்களின் பயிற்சி களமாக தமிழக கடலோர பகுதிகள் இருந்துவந்தன. மத்திய, மாநில அரசுகள் இந்தப் போராளி இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு மற்றும் மன்னார் வளைகுடா கடலில் உள்ள சில தீவுகள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் இவர்களது இயக்கத்தின் முகாம்கள் செயல்பாட்டில் இருந்தன.

இந்த நிலையில், இந்திய அரசின் சமாதான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த போராளி இயக்கங்களை தமிழகத்திலிருந்து வெளியேற நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக போராளிகள் தங்கள் முகாம்களை இரவோடு இரவாக காலி செய்து இலங்கைக்குச் சென்றனர். அவ்வாறு சென்ற அவர்கள் தங்களிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருள்கள், கன்னிவெடிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றது போக எஞ்சியவற்றை ஆங்காங்கே மண்ணில் புதைத்து வைத்துவிட்டுச் சென்றனர்.

தங்கச்சிமடத்தில் கிடைத்த விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் (பழைய படம்)
தங்கச்சிமடத்தில் கிடைத்த விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் (பழைய படம்)
உ.பாண்டி

அவ்வாறு மண்ணில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை அவ்வப்போது சிக்கி வருகின்றன. ஏற்கெனவே 2007-ல் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் துப்பாக்கிகள் சிக்கின. கடந்த ஆண்டு தங்கச்சிமடத்தில் கடற்கரைப் பகுதி ஒன்றில் கழிப்பறை கட்ட குழி தோண்டியபோது பெட்டி பெட்டியாக ஆயுதக்குவியல் சிக்கியது.

இந்த நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள மனோலி தீவில் சந்தேகப்படும் வகையிலான குற்றச்செயல்கள் நடப்பதாக மாவட்ட காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் மற்றும் போலீஸார் ஆகியோர் மனோலி தீவுக்குச் சென்று சோதனையிட்டனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் ஆட்கள் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்துள்ளன.

மனோலி தீவில் கிடந்த மர்மப் பெட்டி
மனோலி தீவில் கிடந்த மர்மப் பெட்டி
உ.பாண்டி

இதையடுத்து தீவு முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது தீவுப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் பெட்டி ஒன்று இருந்ததைக் கண்டனர். அதை முழுதாக வெளியில் எடுத்து பார்த்தபோது அது வெடிமருந்து வைக்கப்படும் பெட்டி எனத் தெரியவந்தது. அதன் மேல் 8.30 Kg எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெட்டியைத் திறக்காமல் பாதுகாப்பாக எடுத்து வந்த போலீஸார் அதை ஆய்வு செய்ய வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு