`கஞ்சா விற்றார்களா தஞ்சை கல்லூரி மாணவர்கள்?- வைரல் போட்டோவும்... போலீஸாரின் பதிலும்...!
தஞ்சாவூரில் கல்லூரி மாணவி ஒருவரும், நான்கு மாணவர்களும் கஞ்சா விற்பனை செய்ததாகவும், அவர்களை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரிப்பது போன்றும் சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தஞ்சாவூரில் பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் இதைத் தடுக்க காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி.

இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் மற்றும் நான்கு மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்ததாகவும் அவர்களை போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரித்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் போட்டோவுடன் தகவல் பரவி வந்தது. இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிலரிடம் விசாரித்தோம், ``கல்லூரிக்குள் கஞ்சா விற்பனை செய்யவில்லை. கல்லூரிக்கு வெளியில்தான் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சென்று கஞ்சா விற்பனை செய்த மாணவியையும் மற்றும் மாணவர்கள் சிலரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் கல்லூரிக்கு அருகே உள்ள புலவர் நத்தம், கோவிலூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த மாணவர்களின் எதிர்காலம் கருதி இது சட்டத்திற்கு விரோதமான பெரும் குற்றச்செயல். இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து புத்திமதி கூறி வழக்கு எதுவும் பதியாமல் அனுப்பிவிட்டதாக தெரிகிறது. கல்லூரி நிர்வாகமும் சரி இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியும் அது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட போலீஸாரும் இது தொடர்பாக எதையும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறது" என்றனர்.
கல்லூரி தரப்பில் இது குறித்து பேசினோம், ``கல்லூரிக்கு அருகில் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்ததாகவும், காவல்துறையினர் பிடித்து விசாரித்ததாகவும் வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் எங்களுக்கும் வந்தது. அதில் மாணவர்கள்தான் என்று இருந்ததே தவிர எங்கள் கல்லூரி மாணவர்கள் என இல்லை. நிஜத்திலும் அந்த மாணவர்கள் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இல்லை. போலீஸாரும் எங்களுக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. இதற்கும் எங்க கல்லூரிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றனர்.

சம்பந்தபட்ட போலீஸாரிடம் இது குறித்து கேட்பதற்கு பல முறை போன் செய்தோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு நமது அழைப்பை ஏற்றவர்கள், ``பிக்பாக்கெட் தொடர்பாகத்தான் சில மாணவர்களை விசாரித்தோம். ஆனால், வாட்ஸ் அப்பில் வருவது நாங்கள் விசாரித்த மாணவர்கள்தானா என்பது தெரியவில்லை" என விளக்கம் கொடுத்தனர். இந்த விவகாரம் தற்போது அந்தக் கல்லூரி வளாகப் பகுதிகளில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.