கேரள மாநிலம், கோழிக்கோடு பாலுச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் ரிஃபா. 21 வயதான ரிஃபா, டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர். ஆல்பங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், ரிஃபாவுக்கும் காசர்கோடைச் சேர்ந்த மெஹனாஸ் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் ரிஃபா, மெஹனாஸ் ஆகியோர் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகவே இருந்துவந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. குழந்தையை ஊரில் விட்டுவிட்டு ரிஃபா-மெஹனாஸ் தம்பதி கடந்த ஜனவரி மாதம் துபாய்க்குச் சென்றனர். துபாயில் கராமா பகுதியில் பர்தா ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தார் ரிஃபா. மெஹனாஸ் வேலை இல்லாமல் இருந்திருக்கிறார். இவர்களுடன் மெஹனாசின் நண்பரும், கேமராமேனுமான ஜெம்ஸாத் என்பவரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் 1-ம் தேதி துபாயில் பிளாட்டில் இறந்த நிலையில் ரிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்பட்டது. ரிஃபா இறந்தது பற்றி மெஹனாஸ் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், எதற்காக ரிஃபா தற்கொலை செய்தார் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. இதையடுத்து துபாய் போலீஸில் புகார் கூறாமலே ரிஃபா உடல் ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தெரியாமல் உறவினர்கள் ரிஃபாவின் உடலை அடக்கம் செய்தனர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரிஃபாவின் பெற்றோர் மெஹனாஸிடம் இறப்புச் சான்றிதழை கேட்டிருக்கின்றனர். அப்போதுதான், ரிஃபாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும், துபாய் போலீஸார் ஃபாரன்சிக் பரிசோதனை மட்டுமே செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக ரிஃபாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் துபாயில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறி மெஹனாஸ் தங்களை ஏமாற்றியதாகவும் ரிஃபா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

பின்னர், கடந்த மே.7-ம் தேதி ரிஃபாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ரிஃபாவின் கழுத்துப் பகுதியில் ஆழமான காயம் இருந்தது கண்டறியப்பட்டதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இதில் ரிஃபாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மெஹனாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உடற்கூறு ஆய்வின் முழு விவரம் வெளியே வரும்போது, ரிஃபாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.