Published:Updated:

`சாதியப் படுகொலைகள்; கோழி அருள் உள்ளிட்ட 41 ரௌடிகள் கைது!' - அதிரடி காட்டும் நெல்லை காவல்துறை!

ரௌடிகளை தேடும் பணியில் காவல்துறையினர்
ரௌடிகளை தேடும் பணியில் காவல்துறையினர்

நெல்லை மக்களைப் பதற வைக்கும் வகையில் சாதிய படுகொலைகள் நடந்த நிலையில் ரௌடிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். கோழி அருள் உள்ளிட்ட 41ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்முறைகள் கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தலை தூக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். காரணம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் முத்து மனோ என்பவரை சக கைதிகள் சிலர் அடித்துக் கொலை செய்த கொடூரம் நடந்தது.

முத்து மனோ
முத்து மனோ

முத்து மனோ கொலைக்குப் பழிவாங்கும் வகையில், அவரது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடக்கு தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற ஒப்பந்ததாரரை வெட்டிக் கொலை செய்தார்கள். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சாதிய வன்முறைகள் தலைதூக்கும் ஆபத்து ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் சாதிய சக்திகள் தலைதூக்குவதை அறிந்த காவல்துறையினர் தொடக்கத்திலேயே அதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதனால் கண்ணன் கொலையில் தொடர்புடைய ரௌடிகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா எனத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட கண்ணன்
கொலை செய்யப்பட்ட கண்ணன்

மலைப்பகுதியில் ட்ரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், நெல்லை எஸ்.பி-யான மணிவண்ணன் உத்தரவுப்படி 5 டி.எஸ்.பி-கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு ரௌடிகளை கைது செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 41 ரௌடிகள் கைது செய்யப்பட்டார்கள். கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, சாதிய வன்முறைகளில் ஈடுபடும் ரௌடிகள் குறித்த பட்டியலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரௌடிகள் கைது செய்யப்பட்டபோது பிடிபட்ட கோழி அருள்
ரௌடிகள் கைது செய்யப்பட்டபோது பிடிபட்ட கோழி அருள்

இதனிடையே, கண்ணன் கொலைக்குப் பின்னர் இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக ஆடியோ பதிவு செய்து வந்த கோழி அருள் என்பவரை போலீஸார் சென்னையில் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். தொடர்ச்சியாக ரௌடிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நெல்லையில் என்கவுண்டரில் ரௌடிகள் கொல்லப்படும் சூழல் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதனால் கலக்கம் அடைந்துள்ள ரௌடிகள் பலரும் வெளிமாநிலங்களுக்குத் தப்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு