Published:Updated:

`தலைமறைவில் `தணிகா டீம்'… கூட்டணியில் குற்றச் செயல்கள்'- கதிகலங்கும் காஞ்சிபுரம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்து வருகிறார்கள். தணிகா டீம் கைது செய்யப்படாவிட்டால் பெரிய அளவில் அவர்கள் வளர்ந்து விடுவார்கள்.

காஞ்சிபுரம் ரவுடி தணிகா
காஞ்சிபுரம் ரவுடி தணிகா

காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் ஆதரவாளர்களுக்கிடையே நடக்கும் ‘கேங் வார்’ கொலைகள் கடந்த சில மாதங்களாகவே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ரவுடிகள் சுதந்திரமாக திரிவது காஞ்சிபுரம் மக்களை பீதியடையச் செய்தது. காவல்துறை அழுத்தம் காரணமாக கடந்த 17ம் தேதி இரவு தினேஷ் மற்றும் ‘பொய்யக்குளம்’ தியாகு ஆகிய இரண்டு முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட போது பொலீரோ கார், கையெறி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

காஞ்சிபுரம் ஸ்ரீதர்
காஞ்சிபுரம் ஸ்ரீதர்

கைது செய்யப்பட்ட தினேஷ் மீது கொலை, கொலை மிரட்டல், ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல் தியாகு மீதும் பல்வேறு கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 51 வழக்குகள் உள்ளன. இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்த்தரப்பில் இருக்கும் தணிகா டீமைப் பிடிக்க காஞ்சிபுரம் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தணிகாவின் மீது, தினேஷ் கூட்டாளியான ‘ஒயிட்’ கார்த்திக் என்பவனைக் கொடூரமாக கொலை செய்து பாலாற்றில் எரித்தது, ஸ்ரீதரை முகநூலில் கேலி செய்த தினேஷின் நண்பர் சந்திரசேகரைக் கொன்றது எனப் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தினேஷ், தியாகு கைது செய்யப்பட்ட நிலையில் தணிகா மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுவது ஆபத்தை விளைவிக்கும் என்பதை காவல்துறையினர் உணர்ந்துள்ளனர்.

வெங்கட் (தணிகாவின் மாமா), ஜீவா உள்ளிட்ட பல ரவுடிகள் தணிகாவுடன் தலைமறைவாக இருக்கிறார்கள். ``தணிகா டீம் சுபாஷ் பண்ணையார் டீமுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் செயல்களைச் செய்து வருகிறார்கள். தணிகா டீம் கைது செய்யப்படாவிட்டால் பெரிய அளவில் அவர்கள் வளர்ந்து விடுவார்கள்.

காஞ்சிபுரம் ரவுடிகள்
காஞ்சிபுரம் ரவுடிகள்

தினேஷ் மற்றும் தியாகுவைப் போல காவல்துறை வலையில் தணிகா சிக்காவிட்டால், காவல்துறையினர் வேறுவிதமான முடிவில் இருக்கிறார்களாம். இதனால் தணிகா விரைவில் சரணடைவாரா அல்லது கைது செய்யப்படுவாரா என்பது தெரிந்துவிடும்'' என்கிறார்கள் சிலர்.

முக்கிய ரவுடிகளை மட்டுமே பிடித்தால் குற்றங்கள் குறையாது. அவர்கள் சிறையில் இருந்து கொண்டே வெளியில் தங்கள் நெட்வொர்க் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுவார்கள். ஒட்டுமொத்தமாக ரவுடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே காஞ்சிபுரம் ஆன்மிக நகரமாக இருக்கும் என்பது பொதுமக்கள் கருத்தாக இருக்கிறது.