Published:Updated:

`போலீஸ் என்னை பலிகடாவாக்கப் பார்க்கின்றனர்!’ - லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷ்

சுரேஷ், இரண்டு வக்கீல்களுடன் காஸ்ட்லி காரில் வந்து செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியோடு திக்கித் திணறி நின்றனர். 

சுரேஷ்
சுரேஷ்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் இன்று காலை 10.45 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நீதிபதி விக்னேஷ்பிரபு முன் சரணடைந்தார். கடந்த 2-ம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரைத் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர் மர்ம நபர்கள்.

சுரேஷ்
சுரேஷ்

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன், அவரின் அக்கா கனகவல்லியின் மகன் சுரேஷ்  உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்ததாக போலீஸ் கூறுகிறது. இந்த வழக்கில் சுரேஷின் அம்மா கனகவல்லியைக் கைது செய்தது போலீஸ். இந்த நிலையில் சுரேஷ், இரண்டு வக்கீல்களுடன் காஸ்ட்லி காரில் வந்து செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், ``திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே என்னைப் பழிவாங்க நினைக்கின்றனர். என்மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதைக் காரணம் காட்டி, நான்தான் கொள்ளையடித்ததாக போலீஸார் என்னைப் பலியாடாக்கப் பார்க்கின்றனர்.

சுரேஷ்
சுரேஷ்

என்னைப் பிடிப்பதற்காக எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். என் வீட்டிலிருந்த என் அம்மாவைக் கைது செய்து துன்புறுத்துகின்றனர். என்னை எங்கு பார்த்தாலும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளிவிடுவோம் என்று என் அம்மாவிடமும் நண்பர்களிடமும் மிரட்டியிருக்கிறார்கள். போலீஸார் என்னை, என்கவுன்டரில் போட்டுத்தள்ளவே குறியாக இருக்கின்றனர். நான் குற்றவாளி இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்'' என்று கூறியிருக்கிறார் சுரேஷ்.