Published:Updated:

`உஷார்.. மோசடியில் இது புதுசு’- ராணுவ வீரர்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கும்பல்!

bike
bike ( representational image )

ராணுவ வீரர்கள் என்றாலே எல்லோருக்கும் மரியாதை இருக்கும். அவர்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். நமது தேசப் பற்றையும் ராணுவ வீரர்கள் மீதான பெருமதிப்பையும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட சிலர் முயற்சி செய்கிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பார்கள். பொதுவாக, அதிகப் பணத்துக்கு ஆசைப்படுபவர்களைக் குறிவைத்து மோசடிக் கும்பல்கள் செயல்படுகின்றன. மோசடிகளைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் பொதுமக்களும் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

Representational Image
Representational Image

பணம் இரட்டிப்பாகத் தருவது, தங்கக் கட்டிகளைக் கொடுப்பது, ஐம்பது சதவிகிதம் வட்டி கொடுப்பது, இரிடியம் விற்பனை என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏ.டி.எம் கார்டு மோசடியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

`அரசு துணைச் செயலர்; வேலை வாங்கித் தருவதாக மோசடி!’ - போலீஸில் சிக்கிய போலி அரசு அதிகாரி

இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும் சூழலைப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்திருக்கிறது. ராணுவ வீரர் பேசுவது போல செல்போனில் பேசும் கும்பல், அவசரமாகப் போர் முனைக்குச் செல்ல வேண்டியதிருப்பதாகச் சொல்லி நம்ப வைக்கிறது.

Representational Image
Representational Image

தான் உடனடியாகச் செல்ல வேண்டியதிருப்பதால் தன்னுடைய பைக்கை குறைந்த விலைக்கு விற்பதாகச் சொல்லி, பணத்தை அனுப்பிவைத்தால் பைக்கை பார்சலில் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். அதை நம்பி பணத்தை அனுப்புவோரை அந்தக் கும்பல் வழக்கம் போல ஏமாற்றி விடுகிறது.

ராணுவ வீரரின் பெயரில் இந்த நூதன மோசடிக் கும்பல் நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் உள்ள மக்களைக் குறிவைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

இது குறித்து அவர் கூறுகையில், ``கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள ஒருவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர் இந்தி கலந்த தமிழில் பேசியுள்ளார். அவர், சென்னையில் உள்ள ராணுவ முகாமில் இருப்பதாகவும் உடனடியாக லடாக் பகுதிக்கு வருமாறு அழைப்பு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தான் உடனடியாகச் செல்ல வேண்டியதிருப்பதால் தன்னுடைய புதிய மிலிட்டரி மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதனால் அந்தப் புதிய பைக்கை பாதிக்கும் குறைவான விலைக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளார்.

ராணுவ வீரர்கள் மீது எல்லோருக்கும் பெருமதிப்பும் நம்பிக்கையும் இருக்கும். அதைப் பயன்படுத்தி மோசடி நடக்கிறது.
சரவணன், காவல்துறை துணை ஆணையர்

நெல்லையைச் சேர்ந்த நபருக்கு எதிர் முனையில் பேசியவரின் மீது நம்பிக்கை வந்துவிட்டது. காரணம், பேசியவர் தன்னை ராணுவ வீரர் என்று சொல்லியிருக்கிறார். பொதுவாக ராணுவ வீரர்கள் மீது எல்லோருக்கும் மரியாதை இருப்பதுடன் அவர்கள் யாரையும் மோசடி செய்ய மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் நம்பிக்கை வந்துள்ளது.

பைக் போட்டோ, ஆர்.சி புத்தகம் எனப் பலவற்றை அந்த நபர் போனில் அனுப்பியுள்ளார். அத்துடன், முதலில் ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்ய 11,000 ரூபாய் கேட்டுள்ளார். அதனால் சந்தேகமடைந்த அவர் என்னிடம் வந்தார். நான் அந்த நம்பரைப் பரிசோதித்துப் பார்த்தபோது வெளி மாநிலத்திலிருந்து பேசியது தெரியவந்தது.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

அதனால் அந்த நபரிடம் பணம் எதுவும் அனுப்பி விட வேண்டாம் என எச்சரித்தேன். அதன்படி அவர் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டதும் எதிர்முனையில் பேசியவர் உடனடியாக தொடர்பைத் துண்டித்ததுடன் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். இத்தகைய மோசடிக்கு யாரும் பலியாகிவிடக் கூடாது” என்று தெரிவித்தார், காவல்துறை துணை ஆணையர் சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு