Published:Updated:

`டவுன்லோடு... ஷேர்; குமரியில் கைதான இருவர்!' - சிறார் வதை வீடியோ விவகாரத்தில் எச்சரிக்கும் போலீஸ்

போலீஸ்
போலீஸ்

சைபர் செல் மூலம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களைக் கண்காணிக்கிறோம். எனவே, சிறார் வதை வீடியோக்கள் பார்ப்பது மற்றவர்களுக்குத் தெரியது என நினைக்க வேண்டாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களால் தவறவிடப்பட்ட 13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மொபைல்களைக் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் உரியவர்களுக்கு வழங்கினார். உரிமையாளர்களால் தவறவிடப்பட்ட மொபைல் போன்களை சிலர் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். அதை மொபைல் லோக்கேஷன் மூலம் கண்டுபிடித்து மீட்கப்பட்டதாக எஸ்.பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

பின்னர் போலீஸ் ஏ.டி.எஸ்.பி விஜயபாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர்களில் சிறார் வதை வீடியோ பதிவிறக்கம் செய்து பார்ப்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் இதைக் கண்காணிக்கிறார்கள். தனி குழு அமைக்கப்பட்டு சிறார் வதை பதிவிறக்கம் செய்பவர்கள், அதை பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் குறித்து கண்காணிக்கிறார்கள். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து சிறார் வதை வீடியோக்களைப் பகிர்பவர்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்.

`டவுன்லோடு... ஷேர்; குமரியில் கைதான இருவர்!' - சிறார் வதை வீடியோ விவகாரத்தில் எச்சரிக்கும் போலீஸ்

சிறார் வதை வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டால் அட்மின்கள் அதுகுறித்து உடனடியாகப் புகார் தெரிவிக்க வேண்டும். சிறார் வதை வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து அதைப் பகிர்ந்த குளச்சல் பெத்தேல்புரத்தைச் சேர்ந்த பிபின்ராஜ் என்ற பாலிடெக்னிக் மாணவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் சிறார் வதை படங்களைப் பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோன்று குளச்சல் அருகே எள்ளுவிளையைச் சேர்ந்த கலாதரன் (43) என்பவர் ஃபேஸ்புக்கில் சிறார் வதை வீடியோவை பதிவிறக்கம் செய்து மெசஞ்சர் மூலம் 150 பேருக்கு அனுப்பியுள்ளார். வீடியோ வைத்திருக்கும் கலாதரனைக் கைது செய்துள்ளோம். சிறார் வதை வீடியோக்களைப் பார்த்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ அதைப் பிறருக்குப் பகிர்ந்தாலோ போக்ஸோ சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத செக்‌ஷனில் வழக்கு பதிவு செய்கிறோம். இதில் குறைந்தது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மீட்கப்பட்ட மொபைல்களுடன் போலீஸ் அதிகாரிகள்
மீட்கப்பட்ட மொபைல்களுடன் போலீஸ் அதிகாரிகள்

சிறார் வதை வீடியோவை ஒரே ஒருவருக்கு ஷேர் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளங்களில் சிறார் வதை வீடியோக்களைப் பார்ப்பதைவிடவும், பதிவிறக்கம் பண்ணுவதை விடவும் ஷேர் செய்வதுதான் மிகக் கடுமையான குற்றம். சைபர் செல் மூலம் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களை கண்காணிக்கிறோம். எனவே, சிறார் வதை வீடியோக்கள் பார்ப்பது மற்றவர்களுக்குத் தெரியது என நினைக்க வேண்டாம். பெற்றோர்கள் கல்லூரி மாணவர்கள், ஸ்கூல் மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது" என்றார்.

பின் செல்ல