Published:Updated:

`சட்டையில் இருந்து கை எடு.. இல்லண்ணா..’- ஒரத்தநாட்டில் காவலரை கத்தியால் தாக்கி தப்பிய இருவர்

அருண் கைலியை தூக்கிக் கட்டியபடி கையை எடுக்கிறியா இல்லையா எடுக்கலைன்னா செத்த என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி குத்துவதுபோல் ஓங்கியபடி மிரட்டுகிறார்.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

ஒரத்தநாடு அருகே மது விற்பவரை கைது செய்யச் சென்ற போலீஸை இரண்டு பேர் மரக்கம்பு மற்றும் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். போலீஸ் தாக்கப்படுவதை தடுக்காமல் பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். இந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவவிட அவை தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் புதுவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் அப்பகுதியில் வெளிமாநில மது மற்றும் டாஸ்மாக் மதுவை சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். இந்தத் தகவல் காவல் துறையினருக்கு அடிக்கடி வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் செந்தில்குமார் என்பவர் அருணைக் கைது செய்வதற்குச் சென்றார். அப்போது புது விடுதி ஆற்றுப்பாலம் அருகே அருண் மற்றும் அவரின் உறவினர் ஒருவர் என இருவரும் மது போதையில் நின்றுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், செந்தில்குமார் அருணிடம் உன்னைக் கைது செய்ய வந்திருக்கிறேன் எனக் கூற அருண் தப்பியோட முயன்றிருக்கிறார். அப்போது செந்தில்குமார் அவரது சட்டையை பிடித்து ஓட விடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து, அருண் போலீஸ் செந்தில்குமாரிடம் தன்னை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்து பேசியுள்ளார்.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

ஆனால், செந்தில்குமார் அருணை விடவே இல்லை. இந்த நிலையில், அருணின் உறவினர் செந்திலை தாக்க முயன்றார். அப்போதும் அருணும் போலீஸ்காரர் சட்டையைப் பிடித்துக்கொண்டார். என் சட்டையை விட்டுவிடு என போலீஸ்காரர் சொல்ல அதை அவர்கள் கேட்பதாக இல்லை. இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், அருண் போலீஸ் செந்தில்குமாரை பெரிய கம்பைக் கொண்டு ஓங்கி அடித்தார்.

நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை அங்கு கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை. ஒற்றையாளாக வந்த போலீஸ் போதையில் இருந்த இருவரிடமும் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் கடுமையாகத் தாக்கியபோதும் ஒருவர் சட்டையை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். அந்த நபரும் போலீஸ் சட்டையை நன்றாகப் பிடித்துக்கொண்டார். இதையடுத்து, அருண் கைலியைத் தூக்கி கட்டியபடி ``கையை எடுக்கிறியா இல்லையா.. எடுக்கலைன்னா செத்த'' எனக் கூறி மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி குத்துவது போல் ஓங்கியபடி மிரட்டுகிறார்.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

அந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர், `அருண் தேவையில்லாத வேலை பார்க்கிற போலீஸை அடிக்காதே' எனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அருண் கேட்பதாக இல்லை. இந்த நிலையில், அருண் மற்றும் அவரது உறவினரும் போலீஸ் செந்தில்குமாரை தாக்கிவிட்டு ஓடி தப்பிச் சென்றுவிட்டனர்.

இதை அந்த இடத்தில் கூடியிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

இருவர் போலீஸை தாக்கிய விவரம் காவல்துறை உயரதிகாரிகளுக்குச் சென்றுள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீஸார், அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.