திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தவர் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த அருள்குமார். காசிகவுண்டன்புதூர் குமரன் காலனியில் வசித்துவருகிறார்.
அருள்குமார் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகிவந்திருக்கிறார். அந்தப் பெண் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்றும், மீறி திருமணம் செய்தால் கொளுத்திவிடுவதாகவும் அருள்குமார் மிரட்டிவந்திருக்கிறார்.

காவலர் என்பதால் அருள்குமார்மீது புகார் கொடுக்க இளம்பெண்ணின் பெற்றோர் பயந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அவரின் பெற்றோர் விசாரித்தபோது, இளம்பெண் வேலை செய்யும் இடத்துக்கு சனிக்கிழமை காலை 11 மணி அளவில் சென்ற அருள்குமார், அவருடன் சண்டைபோட்டு சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அடித்தது தெரியவந்தது. அதையடுத்து இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அவிநாசி போலீஸார் அருள்குமாரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.