சர்வதேச செஸ் போட்டி மாமல்லபுரத்தில் நடந்துவருகிறது. இதற்கான தொடக்கவிழா, சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி நேரு ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுபாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து செஸ் போட்டியின் நிறைவுவிழாவும் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. அதனால் நேரு ஸ்டேடியத்தில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இன்று காலை திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் நேரு ஸ்டேடியத்தில் கேட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது காவலர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெரியமேடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த காவலரின் பெயர் செந்தில்குமார் என்றும், கடந்த 2011-ம் ஆண்டு காவலராகப் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. ஆயுதப்படையில் பணியாற்றிவந்த செந்தில்குமாரின் சொந்த ஊர் மதுரை. குடும்பத் தகராறு காரணமாக அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.