காதலித்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம்; காட்டுப்பகுதியில் உடல்! - திருப்பத்தூர் காவலர் மரணத்தில் விசாரணை

காதலித்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் போலீஸ்காரர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள வக்கணம்பட்டி ஊசி நாட்டான் வட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரின் மகன் பூவரசன் (24), கோயம்புத்தூரில் காவலராகப் பணியாற்றிவந்தார். இந்தநிலையில், ஜோலார்பேட்டை அருகேயுள்ள குடியானகுப்பத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை பூவரசன் காதலித்துவந்திருக்கிறார். காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருமணத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கி சம்பிரதாயத்துக்கு நேற்று முன்தினம் பூ மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

வரும் 8-ம்தேதி நிச்சயதார்த்தம் நடக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற பூவரசன் நள்ளிரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரின் செல்போன் எண்ணும் `சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன குடும்பத்தார் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள். அப்போது, ஏலகிரி மலையிலுள்ள வாரக்கொட்டை காட்டுப்பகுதியில் பூவரசனின் பைக் நிறுத்தப்பட்டிருப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பூவரசனைத் தேடி பார்த்தபோது, பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் பூவரசன் சடலமாக இறந்துகிடந்தார்.
பூவரசன் வாயில் நுரைத்தள்ளியிருந்தது. அருகில் மதுபான பாட்டில் கிடந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சடலத்தைக் கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏலகிரிமலை போலீஸார், பூவரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், மதுவில் விஷம் கலந்து குடித்து பூவரசன் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து, திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாரிடம் கேட்டபோது, ``பூவரசனின் மரணம் தற்கொலைதான் என்பது உறுதியாகியிருக்கிறது. அவரின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அதன் பின்னரே மற்ற விவரங்களைத் தெரிவிக்க முடியும்’’ என்றார். அதேநேரம், காதலித்த பெண்ணை கரம் பிடிப்பதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா அல்லது பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.