Published:Updated:

குமரி: முன் விரோதம்... புறா வளர்ப்பில் வந்த பிரச்னை! - போலீஸ்காரரை வெட்டிப் படுகொலை செய்த ரெளடி

கொலைசெய்யப்பட்ட போலீஸ் ஸ்ரீசரவணன்
கொலைசெய்யப்பட்ட போலீஸ் ஸ்ரீசரவணன்

ரஞ்சித் குமார் திடீரென வழிமறித்து ஸ்ரீசரவணனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற விக்ரமுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீசரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கலைநகர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் என்பவரின் மகன் ஸ்ரீசரவணன் (32). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுஜி (32) என்பவரைக் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீவேல் (11) என்ற மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீதா (10) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஸ்ரீசரவணனை, அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் லேசான காயமடைந்த சரவணன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று, கட்டுப்போட்டுவிட்டு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவரும், அவரின் நண்பரான பட்டகசாலியன்விளையைச் சேர்ந்த விக்ரம் என்பவரும் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த ரஞ்சித் குமார் திடீரென வழிமறித்து, ஸ்ரீசரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற விக்ரமுகும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீசரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்ரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து கோட்டாறு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

 கொலை
கொலை

தலைமறைவாக இருந்த ரஞ்சித் குமாரை சுமார் ஆறு மணி நேரத்தில் போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை போலீஸ் வேலையில் இருந்த சரவணன், மீண்டும் போலீஸ் வேலையில் சேராமல் கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்று வந்தார். கடந்த 10 நாள்களாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில், நோயாளிகளின் உறவினரின் அனுமதியுடன் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வந்தார்.

ஸ்ரீசரவணனின் வீட்டின் அருகில் ராஜாக்கமங்கலம் பூவன்குடியிருப்பைச் சேர்ந்த ரஞ்சித் (34) வாடகைக்கு வசித்துவந்தார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் இவர்களது வீட்டின் அருகில் வாடகைக்குக் குடியிருந்துள்ளனர். யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பிணியிடம் அத்துமீறும் நோக்குடன் ரஞ்சித் அந்த வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இதைக் கண்டித்த சரவணன், ரஞ்சித்தைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் புகார் அளிக்க, ஸ்ரீசரவணன் உதவியுள்ளார். இந்த முன் விரோதம் ரஞ்சித்துக்கு இருந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ரஞ்சித் குமார்
கைதுசெய்யப்பட்ட ரஞ்சித் குமார்

மேலும் ஸ்ரீசரவணனின் மகன் புறா வளர்த்துவருகிறார். ரஞ்சித்தும் புறா வளர்த்துவருகிறார். ரஞ்சித்தின் புறா, சரவணனின் உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போயிருக்கிறது. அவர் புறாவைப் பிடித்து 'இது யாருடைய புறா எனத் தெரியவில்லை நீ வளர்த்துக்கொள்' என ஸ்ரீசரவணனின் மகனிடம் கொடுத்துள்ளார். ஸ்ரீசரவணனின் மகன் புறாவைக் கொண்டுவரும்போது அதைப் பார்த்த ரஞ்சித், புறாவை வாங்கி, இது என்னுடைய புறா’ எனக் கூறியதுடன் மிரட்டல் விட்டிருக்கிறார். இது பற்றி ஸ்ரீசரவணனின் மகன் வீட்டில் வந்து கூறியுள்ளார். ஸ்ரீசரவணன் இது பற்றி ரஞ்சித்திடம் தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் மேலும் விரோதம் வளர்ந்தது. ரஞ்சித் குமார் இதையெல்லாம் மனதில்வைத்து ஸ்ரீசரவணனைக் கொலைசெய்திருக்கிறார். ரஞ்சித் குமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு