Election bannerElection banner
Published:Updated:

குமரி: புத்தாண்டு கொண்டாட்டம்; பணம் கொடுக்க மறுத்த மனைவி! - மாமியார் வீட்டுக்கு தீ வைத்த போலீஸ்காரர்

தீயில் கருகிய பொருள்கள்
தீயில் கருகிய பொருள்கள்

குழந்தைகள் சத்தத்தைக் குறைக்காமல் தொடர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அருள் ஜாக்சன், திடீரென மாமியார் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33). இவருக்கும், குளச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அருள் ஜாக்சன் (35) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருள் ஜாக்சன் தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். ஆட்லின் ரிபா கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குழந்தைகளுடன் வெட்டூர்ணிமடத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

நேற்றிரவு அருள் ஜாக்சன் வெட்டூர்ணிமடத்திலுள்ள மனைவி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது புத்தாண்டைக் கொண்டாட அருள் ஜாக்சன் பணம் கேட்டதாகவும், அதற்கு அவரது மனைவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவரது குழந்தைகள் டி.வி-யில் சத்தத்தை அதிகமாகவைத்து சுட்டித் தொலைகாட்சி சேனல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதை அருள் ஜாக்சன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

சேதமான டி.வி
சேதமான டி.வி

ஆனால் குழந்தைகள் டி.வி சத்தத்தைக் குறைக்காமல் தொடர்ந்து குழந்தைகளுக்கான சேனல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அருள் ஜாக்சன் திடீரென மாமியார் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தீ வேகமாக எரிந்ததையடுத்து வீட்டிலிருந்தவர்கள் வெளியே ஓடியிருக்கிறார்கள். மேலும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் துணிகள், கட்டில் மற்றும் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும், வடசேரி போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே கணவன் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, ஆட்லின் ரிபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். இது குறித்த புகாரின்பேரில் வடசேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``அருள் ஜாக்சனினின் சம்பளப் பணம் அவரின் மனைவிக்குச் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. நேற்று ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட அருள் ஜாக்சன் தனது மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் தீ வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு