Published:Updated:

சாக்லேட், டூத் பேஸ்ட் பார்சலுடன் குட்கா கடத்தல்!- அரசியல்வாதியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்

திருவண்ணாமலையைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் முரளி என்பவரது வீட்டில், மூட்டை மூட்டையாகப் பதுக்கப்பட்டிருந்த 48 மூட்டைகள் அடங்கிய சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களுடன் போலீஸார்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களுடன் போலீஸார்

திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை பண்டாரக்குட்டை தெருவைச் சேர்ந்தவர் முரளி. தி.மு.க பிரமுகரான இவர், திருவண்ணாமலையில், சாக்லேட் மற்றும் டூத் பேஸ்ட் விற்பனை ஏஜென்சி எடுத்து நடத்திவருகிறார். சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து சாக்லேட், டூத் பேஸ்ட் பார்சல்கள் எடுத்து வருவது வழக்கம். அப்படி, பார்சல்களை எடுத்துவரும்போது, அவற்றுக்கு நடுவில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருள்களை மறைத்துக் கடத்தி வந்து, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்திருக்கிறார்.

முரளி
முரளி

இதை மோப்பமிட்ட காவல்துறை, டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் ஏ.டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையில் பதினோருபேர் கொண்ட குழுவினர், முரளியின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த, 48 குட்கா மூட்டைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்கின்றனர். அதோடு தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 1 மினி வேனைப் பறிமுதல் செய்தனர். முரளியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த, ஓட்டுநர் சுரேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடிவருகிறது காவல்துறை.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ``திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், சின்னச் சின்ன பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதாகத் தகவல் வந்தது. இந்தப் பொருள்களை யார் சப்ளை செய்கிறார்கள் என்று மோப்பமிட்டோம்.

குட்கா
குட்கா

அப்போதுதான், முருகேசன் மகன் முரளி என்பவர் மூலம் சப்ளையாகிறது என்பது தெரிந்தது. அதன்பின்பு முரளியைச் சுற்றிவளைத்துப் பிடித்தோம். அவர் வீட்டில் பதுக்கியிருந்த குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தோம்“ என்றனர். மேலும், முரளி ஏற்கெனவே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தி.மு.க மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவிடம் கேட்டோம், `முரளி என்பவர் தி.மு.க வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. திருவண்ணாமலையைப் பொறுத்தவரை கட்சியில் பொறுப்பில் உள்ள எல்லோரையும் எனக்கு தெரியும். முரளி என்பவர் யாரென்றே தெரியாது' என்றார்.