கோவை மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரின் மனைவி திவ்யபாரதிக்கு, பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து நான்கு நாள்களே ஆன திவ்யபாரதியின் பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் குறித்து 12 தனிப்படைகள் அமைத்து, போலீஸார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் அங்கு சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு வெளியே தொடங்கி கோவை வரை சுமார் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

மேலும் கோவை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுசெய்தனர். இதில் குழந்தையைக் கடத்தியவர்கள் குறித்து தெரியவந்தது.
உடனடியாக கேரள மாநிலம், பாலக்காடுக்குச் சென்ற தனிப்படை போலீஸார், குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையைக் கடத்திச் சென்ற கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த ஷமீனா என்ற பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸ் கைதுசெய்தது.

கணவரிடமிருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் ஷமீனாவிடம் விசாரணை செய்ததில், “என் கணவரிடமிருந்து பிரிந்து, மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, சேர்ந்து வாழ்ந்துவருகிறேன்.
மணிகண்டன் தனக்கும் வாரிசாக ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டார். அதனால் நான் கர்ப்பமாக இருப்பதுபோல நடித்தேன். எனக்குக் குழந்தை பிறந்திருப்பதாக மணிகண்டனிடம் பொய் கூறினேன். பின்னர் மணிகண்டன் பிறந்த குழந்தையைக் காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதன் காரணமாகத்தான் இந்தக் குழந்தையைக் கடத்திச் சென்றேன்” என்று கூறியிருக்கிறார். குழந்தையைக் கடத்திச் சென்ற 22 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததற்கு தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டிவருகின்றனர்.