Published:Updated:

`பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் அதே தவறு!' - குண்டர் சட்டத்திலிருந்து தப்பித்த திருநாவுக்கரசு, சபரி

திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகார் தமிழகத்தையே உலுக்கியது. அந்தப் புகாரில், `சபரிராஜன் என்பவர் முகநூல் மூலம் எனக்கு அறிமுகமானார். அவுட்டிங் போகலாம் எனக் கூறி என்னை காரில் அழைத்துச் சென்றார். சபரியின் நணபர்களான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் எங்களுடன் பயணத்தின்போது இடையில் இணைந்து கொண்டனர். காரில் ஏறிய சில நிமிடங்களில் என்னை பாலியல்ரீதியில் துன்புறுத்தி அதை ஒரு செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.

`எங்கள் சொல்படி கேட்க வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம்' என மிரட்டினர். முதலில் இதை நான் வெளியில் சொல்லவில்லை. பின்னர் என் சகோதரனிடம் தெரிவித்தேன். சபரி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரைப் பிடித்து என் அண்ணன் விசாரித்தார். அப்போது அவர்களின் செல்போனை வாங்கிப் பார்த்த போது நிறைய பெண்களின் வீடியோக்கள் இருந்தன. இந்த விவகாரத்தில் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சி வழக்கு

கல்லூரி மாணவியின் புகாரையடுத்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் சில அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது பேசப்பட்டது. இதன் காரணமாகக் கொங்கு மண்டலமே பரபரப்பானது.

பொள்ளாச்சி அருகே உள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில்தான் கல்லூரி மாணவிகளை மிரட்டி வீடியோ எடுத்ததாகக் கைதான மூவரும் வாக்குமூலம் அளித்தனர். முதலில் இது பண்ணை வீடு எனக் கூறப்பட்டது. அது பண்னை வீடு இல்லை, கிராமத்தின் நடுவே உள்ள திருநாவுக்கரசுவின் பழைய வீடு என்பது தெரியவந்தது.

Vikatan

இந்த விவகாரம் தொடர்பாக, வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்ட திருநாவுக்கரசு, ``என் மீது எந்தத் தவறும் இல்லை. நான் எந்தப் பெண்ணையும் மிரட்டவில்லை. இதில் அரசியல் இருக்கிறது. பலபேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். என் உயிரே போனாலும் பரவாயில்லை... நான் எல்லா உண்மைகளையும் சொல்வேன்” என்றார். ஒருகட்டத்தில், தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு மார்ச் 4-ம் தேதி மாக்கினாம்பட்டியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இந்த வழக்கைக் கடந்த மார்ச் 12-ம் தேதி, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது தமிழக அரசு. திருநாவுக்கரசுவின் நண்பரான மணிவண்ணன் என்பவர் அடிதடி வழக்கில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் சரணடைந்தார். மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், அவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு ஏப்ரல் மாதத்தில் சிபிஐ கைக்கு மாறியது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசுவின் தாய் பரிமளா, சபரிராஜனின் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், `இந்த வழக்கை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ்தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது தொடர்பாக குடும்பத்தினருக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்ட உத்தரவு தொடர்பாக உரிய ஆவணங்களை உறவினர்களுக்கு முறையாக வழங்கவில்லை எனக் கூறி, திருநாவுக்கரசு, சபரிராஜன் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அறிவுரைக் கழகத்தில் ஆஜராகினர். அறிவுரைக் கழகத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்டவர்களே தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம். அதன்படி, முக்கிய குற்றவாளி எனச் சொல்லப்படும் திருநாவுக்கரசு, தனது தாய் லதாவுடன் ஆஜரானார். அறிவுரைக் கழகத்தில் ஆஜரான நான்கு பேருமே, 'அரசியல் காரணங்களுக்காக நாங்கள் பந்தாடப்படுகிறோம்' என்று கூறியுள்ளனர்.

பொதுவாக, குண்டர் சட்டம் பாய்ந்தவுடன் குண்டர் சட்டம் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை, அவர்களின் உறவினர்களிடம் வழங்க வேண்டும். ஆனால், பொள்ளாச்சி வழக்கில் உறவினர்களுக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை. போலீஸாரின் இந்தத் தவற்றை, சம்பந்தப்பட்டவர்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். மேலும், குண்டர் சட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் கொடுத்த ஆவணங்களிலும் போதிய விவரங்கள் இல்லை. இதனால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள், குண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்துவிட்டனர்.

கைது
கைது

இது முதல்முறை அல்ல... ஏற்கெனவே தமிழகத்தையே அதிரவைத்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான தஷ்வந்த் வழக்கிலும், போலீஸ் இதே தவற்றைத்தான் செய்தது. இதன் காரணமாக தஷ்வந்த்தும் குண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்தார். தற்போது அதே பாணியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களும் குண்டர் சட்டத்தை உடைத்துவிட்டனர். `இது குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸே கொடுக்கும் வாய்ப்பாகத்தான் தெரிகிறது' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு