Election bannerElection banner
Published:Updated:

பொன்னேரி: `நள்ளிரவு நேரம்; முட்புதரில் அழுகைச் சத்தம்!’ - 80 வயது தாயை வீசிச் சென்ற மகன்

மூதாட்டி
மூதாட்டி

திருவள்ளூர் அருகே பெற்ற மகனால் முட்புதரில் வீசப்பட்ட  80 வயது மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெற்ற மகனே தன் தாயைத் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் போதுமான அளவில் கழிவறை வசதிகள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் திறந்தவெளியைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்திவருகின்றனர். அந்த வகையில், நேற்றிரவு ஏலியம்பேடு கிராமப் பெண்கள் சிலர் அவசரத்துக்காக ஒதுங்கியிருக்கிறார்கள்.

ஏலியம்பேடு கிராம மக்கள்
ஏலியம்பேடு கிராம மக்கள்

அப்போது அங்கிருந்த முட்புதர் ஒன்றில் பெண் ஒருவரின் அழுகை கலந்த முனகல் சத்தம் ஓங்கி ஒலித்திருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் ஒலித்த அழுகைச் சத்தத்தால் திடுக்கிட்டுப்போன பெண்கள், சத்தம் வந்த புதரை நோக்கி விரைந்திருக்கின்றனர். அப்போது முட்புதருக்கு நடுவில் சாய்ந்த நிலையில் மூதாட்டி ஒருவர் எழுந்துகொள்ள முடியாமல் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக மூதாட்டியைப் புதரிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

மூதாட்டிக்குத் தண்ணீர் கொடுத்த பொதுமக்கள் விசாரித்தபோது, மூதாட்டி எந்த பதிலும் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்திருக்கிறார். அதையடுத்து, கிராம மக்கள் பொன்னேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இரவு ரோந்துப் பணியிலிருந்த பொன்னேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து மூதாட்டியை விசாரித்தனர். அப்போதும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த மூதாட்டி சில நிமிடங்கள் கழித்துப் பேசியிருக்கிறார்.

மூதாட்டியிடம் விசாரிக்கும் போலீஸார்
மூதாட்டியிடம் விசாரிக்கும் போலீஸார்

அப்போது அந்த மூதாட்டி, "ஐயா என் பேரு காந்திமதி. எனக்கு 80 வயசாகுது. எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்குறாங்க. எங்க வீடு மணலி சேக்காடு பகுதியில இருக்கு. என்னோட வீட்டுக்காரர் இறந்துபோயிட்டாரு. அதுல இருந்தே என் பசங்க என்னை ஒழுங்கா கவனிக்கறதில்லை. கொஞ்ச நாளா என் சின்னப் பையன் வீட்டுலதான் இருக்கேன். அவனும் கூலி வேலைதான் செஞ்சுட்டு இருக்கான். அதுல வர்ற வருமானத்தைவெச்சுக்கிட்டு அவன் குடும்பத்தை கவனிக்கவே அவனுக்குச் சரியா இருக்கு. அதனால, என்னை அவங்க எல்லாரும் பாரமா நெனைக்குறாங்க. சில மணி நேரத்துக்கு முன்னால என் மகன் சங்கர் என்னை வண்டியில கொண்டாந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்துல தூக்கியாந்து போட்டுட்டுப் போயிட்டான். எனக்கு நெறைய முள் குத்தியிருக்கு ஐயா, ரொம்ப வலிக்குது. எழுந்திருக்கக்கூட தெம்பில்லை" என்று போலீஸாரிடம் அழுது புலம்பியிருக்கிறார்.

மூதாட்டியின் நிலையைக் கண்டு மனம் வருந்திய போலீஸார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொன்னேரி அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் மூதாட்டி
ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் மூதாட்டி

மூதாட்டிக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். தொடர்ந்து, பொன்னேரி போலீஸார் மூதாட்டி அளித்த தகவலின் பேரில் புகார் பதிவு செய்து, அவரை முட்புதரில் வீசிவிட்டுச் சென்ற அவருடைய மகனை விசாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு