Published:Updated:

நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம், ரசிகர்கள்!

 நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சென்னை ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ரா, தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பிருப்பதாகப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு டாக்டர்கள், போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

` பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா, நேற்று அதிகாலை ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. அதனால் நடிகை சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த காதல் கணவர் ஹேமந்த்திடம் நசரேத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அறையை விட்டு தன்னை வெளியில் அனுப்பிவிட்டு சித்ரா, தற்கொலை செய்துக் கொண்டார் என்ற தகவலை ஹேமந்த் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கடும் அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், நடிகை சித்ராவின் நலம்விரும்பிகள், ரசிகர்கள் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்று கூறினர்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

இந்தநிலையில் நடிகை சித்ராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரின் மரணத்துக்கான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீஸாரும் சித்ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் காத்திருந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று முற்பகலில் சித்ராவின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை

சித்ராவின் சடலத்துடன் அவரின் சகோதரரும் இன்னொரு நபரும் மட்டுமே ஆம்புலன்ஸில் சென்றனர். மற்றப்படி உறவினர்கள், குடும்பத்தினர்கள் இன்று மருத்துவமனைக்கு வரவில்லை. சித்ராவின் நண்பர்கள், ரசிகர்கள் மட்டும் வந்திருந்தனர். அதேநேரத்தில் சித்ராவின் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏராளமானவர்கள் அங்கு குவிந்திருந்தனர். ஆனால், போலீஸாரின் கெடுபிடியால் நடிகை சித்ராவின் முகத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் பலர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதைப் பார்க்க முடிந்தது.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வர இன்னும் சில தினங்களாகும். ஆனால் அதற்கு முன், மருத்துவர்கள், போலீஸாரிடம் வாய்மொழியாக சில தகவல்களை தெரிவித்திருக்கின்றனர். அதன்படி சித்ராவின் சடலத்தை உடற்கூறாய்வு செய்த மருத்துவக்குழு, அவர் தற்கொலை செய்ததற்கான அறிகுறிகளே காணப்படுவதாகக் கூறியிருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதும் சித்ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். இருப்பினும் ஆர்.டி.ஓ விசாரணை, பிரேதப் பரிசோதனையின் முழு தகவல் அறிக்கை வந்தபிறகே மரணத்துக்கான காரணம் தெரியும் என போலீஸார் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் சடலம் பிரேத பரிசோதனை நடந்தபோது அவரின் கணவர் ஹேமந்த்திடம் , நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது அவர், ஹோட்டலில் நடந்த சம்பவங்களைக் கூறியிருக்கிறார். அதை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்திருக்கின்றனர். பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் தற்கொலை என்று கூறப்பட்டிருப்பதால், ஹேமந்த் மீது தற்போதைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

இதுகுறித்து நசரேத்பேட்டை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பிரேதப் பரிசோதனையில் முதற்கட்ட தகவலின்படி நடிகை சித்ரா தற்கொலை செய்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். ஆர்.டி.ஓ விசாரணைக்குப்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நடிகை சித்ராவின் செல்போன் அழைப்புகளை முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம். அவர் செல்போனில் நீண்ட நேரமாக அம்மாவுடன் பேசியிருக்கிறார். மேலும், சில மெசேஜ்களை அவரின் அம்மாவுக்கு அனுப்பியிருக்கிறார். நடிகை சித்ராவின் இந்த முடிவுக்கு குடும்பப் பிரச்னையே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு