Published:Updated:

`பகை வளரும்.. பழிக்குப் பழி தொடரும்..!’ - மதுரையைக் கதிகலங்கவைக்கும் போஸ்டர்

பழிக்குப் பழி வாங்குவோம் என்று போஸ்டர் ஒட்டி எதிரிகளுக்குத் தெரிவிக்கும் புதிய கலாசாரம் மதுரையில் உருவாகி வருவது, பொதுமக்களுக்குப் பதற்றத்தையும் காவல்துறைக்குத் தலைவலியையும் உண்டாக்கி வருகிறது.

சர்ச்சை போஸ்டர்
சர்ச்சை போஸ்டர்

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பிரவீன்குமார். இவர் மதுரை காமராசர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பானடி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சர்ச்சை போஸ்டர்
சர்ச்சை போஸ்டர்

இக்கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் பிரவீனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் பல இடங்களில் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது வழக்கமான அஞ்சலி போஸ்டராக இல்லாமல், இக்கொலைக்கு விரைவில் பழி வாங்கப்போவதாக எச்சரிக்கும் வகையில் வாசகங்களுடன் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள அழகர்கோவில் சாலையிலுள்ள சுவர்களிலும் இந்த எச்சரிக்கை அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அஞ்சாமல் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியுள்ளது சவால் விடுவது போலுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என்பது பற்றி தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சர்ச்சை போஸ்டர்
சர்ச்சை போஸ்டர்

இதுபோன்று மறைமுகமாக தங்கள் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து கொலை செய்யும் சம்பவம் ஏற்கெனவே மதுரை புதூர் பகுதியில் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கலாசாரம் மீண்டும் தொடர்வது மாநகர காவல்துறைக்குச் சவால் விடுவது போலுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.