Published:Updated:

`கத்தியுடன் மிரட்டல்; துப்பாக்கியை எடுத்த இளைஞர்!’ - விபரீதத்தில் முடிந்த அமெரிக்க ப்ராங்க் வீடியோ

சுட்டுக்கொல்லப்பட்ட ப்ராங்க்ஸ்டார்
சுட்டுக்கொல்லப்பட்ட ப்ராங்க்ஸ்டார் ( Facebook )

அமெரிக்காவில் தனது யூடியூப் பக்கத்துக்காக ப்ராங்க் செய்து வீடியோ எடுத்த இளைஞர், தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கத்துக்குப் பின்னர் ப்ராங்க் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது எனலாம். இது உலகம் முழுதும் நடத்தப்படுகிறது. பெரும்பாலான சேனல்கள் ஆட்களை செட் செய்து வீடியோ எடுத்தாலும், சிலர் நேரடியாக களத்தில் ப்ராங்க் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சில வகை ப்ராங்குகளுக்கு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களே தடை செய்திருக்கின்றன. ஒரு சில நாடுகளும் ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பதற்குத் தடை விதித்திருக்கின்றன.

டிராம்போலைன் பூங்கா
டிராம்போலைன் பூங்கா
Facebook

ப்ராங்க் வீடியோக்கள் எடுக்கும் போது, எதிரிலுள்ள நபரை வம்பிழுப்பது, பேய் வேடமிட்டு பயமுறுத்துவது, கத்தி, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுவது போன்ற வில்லங்கமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. அப்படிச் செய்யும்போது, அந்த ப்ராங்க் மோசமகச் சென்று முடியவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படியான ஒரு மோசமான சம்பவம் அமெரிக்காவிலுள்ள நாஷ்வில்லி பகுதியில் நடந்திருக்கிறது. யூடியூப் சேனல் வைத்திருக்கும் திமோதி வில்க்ஸ் (Timothy Wilks) என்ற 20 வயது இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை டிராம்போலைன் பூங்காவின் (Urban Air Indoor Trampoline Park) வாகன நிறுத்தத்தில் கத்தியைக் காட்டிக் கொள்ளையடிப்பது போன்ற ப்ராங்க் செய்திருக்கிறார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம்
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடம்
Facebook

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சிலரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டிருக்கிறார். இதை அறியாத, அந்தக் கூட்டத்திலிருந்த டேவிட் ஸ்டார்ன்ஸ் ஜூனியர் என்ற 23 வயது இளைஞர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் திமோதி வில்க்ஸைச் சுட்டுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த திமோதியுடன் இருந்தவர், `நாங்கள் ப்ராங்க் செய்யவே வந்தோம்’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பே திமோதி சுடப்பட்டுவிட்டார்.

பணமழை முதல் மரணம் வரை... - உலகிற்கு சேதி சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள்! #PrankGoneWrong

சம்பவ இடத்துக்கு வந்த நாஷ்வில்லி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். டேவிட் கத்தியுடன் வந்த நபரிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே துப்பாக்கியால் சுட்டதாகவும், அவர்கள் ப்ராங்க் வீடியோ செய்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

யூடியூபர் திமோதி வில்க்ஸ்
யூடியூபர் திமோதி வில்க்ஸ்
Facebook

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை. விசாரணை மட்டுமே நடைபெற்றுவருகிறது. தனது யூடியூப் சேனலுக்காக ப்ராங்க் செய்ய நினைத்த இளைஞர், உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ப்ராங்க்கில் ஈடுபடும்போது மோசமான சம்பவங்களும், உயிரிழப்புகளும் நடைபெறுவது இது முதன்முறை கிடையாது. இருந்தபோதிலும் பலர், வியூஸுக்காக ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு