Published:Updated:

`இவர்கள் எந்தக் கொடூரத்தையும் செய்வார்கள்!’ - கேரளாவில் பூனையைத் தூக்கில் தொங்கவிட்ட போதை ஆசாமிகள்

இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் அவர்களின் சந்தோஷத்துக்காக எந்தச் செயலும் செய்யத் தயங்கமாட்டார்கள்.

தூக்கிலிடப்பட்ட பூனை
தூக்கிலிடப்பட்ட பூனை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பால்குளங்கர பகுதியில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்திவரும் இந்தக் கிளப்பில் மது குடிப்பவர்களும், சீட்டாடுபவர்களும் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், அந்தக் கிளப்பில் வெள்ளை நிற கர்ப்பிணி பூனை ஒன்றை மனசாட்சியே இல்லாமல் சிலர் தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த பூனையை புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் பார்வதி, லதா, இந்திரா ஆகியோர் வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பூனை
பூனை

இதைத் தொடர்ந்து, பூனையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பூனை தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு பின்னர் கயிற்றில்கட்டி தொங்கவிடப்பட்டதா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவரும். மேலும், கர்ப்பிணி பூனை கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கிளப்புக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு குடி போதையில் கர்ப்பிணி பூனையை தூக்கிலிட்டு கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. பிரிவு 429-ன் கீழ் மிருகங்களை துன்பப்படுத்துதல், கொல்லுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வஞ்சியூர் போலீஸார் தெரிவித்தனர். விலங்குகளை துன்புறுத்தினாலோ, கொன்றாலோ 5 ஆண்டு சிறையோ, அபராதமோ விதிக்க சட்டம் வழிவகை செய்வதாக கூறப்படுகிறது.

தூக்கிலிடப்பட்ட பூனை
தூக்கிலிடப்பட்ட பூனை

போலீஸில் புகார் அளித்த பார்வதி கூறுகையில், ``நான் புகார் அளித்த பிறகும் அதன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயாராக இல்லை. இதையடுத்து, நான் சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பதிவு செய்து நியாயம் கேட்டேன். அதைத் தொடர்ந்து இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெரு நாயாலும், பூனையாலும் ஏற்படும் பிரச்னை குறித்து பேசுபவர்கள் இதுபோன்ற தரம் தாழ்ந்த சம்பவங்கள் குறித்தும் கருத்தில்கொள்ள வேண்டும். நாங்கள் சென்றபோது பூனையைக் கொன்ற இடத்தை கழுவி சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டவர்கள் அவர்களின் சந்தோஷத்துக்காக எந்தச் செயலும் செய்யத் தயங்கமாட்டார்கள். எனவே, அவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.