சென்னை: போட்டி போட்டு விஷம் குடித்த தம்பதி; கர்ப்பிணி உயிரிழப்பு - வரதட்சணைக் கொடுமை எனப் புகார்!

சென்னை, குன்றத்தூர் பகுதியில் போட்டி போட்டு விஷம் குடித்த தம்பதியரில் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் வரதட்சணைக் கொடுமையால் தனது மகள் இறந்திருப்பதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள தண்டலம், மணிமேடு, வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பூபதிதாஸ் என்கிற கமல் (26). டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி துர்கா (22). இவர்களுக்கு கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. இந்தநிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கமல், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார். அதைப் பார்த்த துர்கா, கமலின் கையிலிருந்த விஷ பாட்டிலைத் தட்டிவிட்டதோடு, அதிலிருந்த விஷத்தை முதலில் குடித்திருக்கிறார்.

அதைத் தடுத்த கமல், அவரும் போட்டி போட்டுக்கொண்டு விஷத்தைக் குடித்ததாகச் சொல்கிறார்கள். அதனால் இருவரும் வீட்டிலேயே மயங்கிக் கிடந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டுக்கு வந்த கமலின் உறவினர்கள், இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா உயிரிழந்தார். கமலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கணவன் - மனைவி இடையே நடந்த குடும்பத் தகராறில் கர்ப்பிணி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், துர்காவின் தந்தை வீராராகவன் என்பவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,``நான் விழுப்புரம் மாவட்டம், கலித்திரம்பட்டு, மாரியம்மன்கோயில் தெருவில் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறேன். நான் கூலி வேலை செய்கிறேன். என்னுடைய மனைவி பெயர் பராசக்தி. எனக்கு நாராயணன் என்ற மகனும் வள்ளி, துர்கா என இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். துர்காவைக் கடந்த கமலுக்கு 16.9.2019-ல் திருமணம் செய்து கொடுத்தோம். திருமணத்தின்போது துர்காவுக்கு 14 சவரன் தங்க நகைகளும், மருமகன் கமலுக்கு 2 சவரன் செயினும் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களையும் சீர்வரிசையாகக் கொடுத்தோம்.
திருமணத்துக்குப் பிறகு சென்னை குன்றத்தூரிலுள்ள கணவர் வீட்டில் துர்கா குடியிருந்தார். என் மகள் துர்காவுக்கும், மருமகன் கமலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். எனது மூத்த மகள் வள்ளியும், அவரின் கணவரும் சேர்ந்து இருவரையும் சமரசப்படுத்திவந்தனர். துர்கா ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தார். சீமந்தத்தின்போது ஐந்து சவரன் சரடு வேண்டும் என்றும், கமலின் தம்பி குணாவின் திருமணச் செலவுக்கு எங்கள் சார்பில் 2 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் துர்காவும் கமலும் என்னிடம் கேட்டார்கள். அதற்கு உடனே பணத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது. திருமண அழைப்பிதழ் கொடுக்க வரும்போது ஒரு லட்சம் ரூபாயும் திருமணத்தின்போது ஒரு லட்சம் ரூபாயும் தருவதாகக் கூறினேன்.
ஆனால் துர்காவின் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக என் மகள் என்னிடம் கூறிவந்தார். மேலும், குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கமல் அடித்து துன்புறுத்துவதாகவும் துர்கா கூறிவந்தாள். அதற்குக் கண்டிப்பாக நான் பணம் ரெடி பண்ணித் தருகிறேன் என்று உறுதியளித்திருந்தேன். இந்தநிலையில், 19.1.2021-ல் இரவு 11 மணியளவில் கமலின் அக்கா பூங்கொடி எனது மூத்த மருகனை போனில் தொடர்புகொண்டு துர்கா மருந்து சாப்பிட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

சிறிது நேரத்துக்கு பிறகு கமலின் உறவினர் ஜெயந்தி என்பவர் துர்கா இறந்துவிட்டதாக என்னுடைய மூத்த மருமகனிடம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக நாங்கள் சென்னை வந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துர்காவின் சடலம் இருந்தது. அதே மருத்துவமனையில் கமலும் சிகிச்சை பெற்றுவருகிறார். எனது மகள் துர்காவின் இறப்பு சம்பந்தமாக முறையாக விசாரணை செய்து, காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பாரத் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார். திருமணமாகி சில ஆண்டுகளே ஆகியிருப்பதால், துர்கா மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.