Published:Updated:

சென்னை: கொள்ளையனுடன் போராடிய 9 மாத கர்ப்பிணி - 11 சவரன் தாலி செயின் தப்பியது எப்படி?

செயின் பறிப்பு
செயின் பறிப்பு ( representational image )

சென்னை பல்லாவரத்தில் வீட்டின் அருகில் நடந்து சென்ற ஒன்பது மாத கர்ப்பிணி அணிந்திருந்த 11 சவரன் தாலி செயினைப் பறிக்க முயன்ற கொள்ளையனுடன் தனியொருத்தியாக துணிச்சலுடன் போராடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரைச் சேர்ந்தவர் கீதா (24). ஒன்பது மாத கர்ப்பிணியான இவர், வீட்டின் வாசலிலுள்ள பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்து சாமி கும்பிடுவது வழக்கம். அதன்படி கடந்த 9-ம் தேதி காலையில் சாமி கும்பிட கீதா வந்தார். அப்போது, கற்பூரம் இல்லாததால் அதை வாங்க அருகிலுள்ள கடைக்குச் சென்றார். பின்னர் கற்பூரம் வாங்கிக்கொண்டு ரோட்டிலிருந்து தெருவுக்குள் சென்று சாமி கும்பிட்டிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கீதாவைக் கடந்து பைக்கில் இரண்டு பேர் சென்றனர். அப்போது கீதா அணிந்திருந்த தாலி செயின் அவர்களின் கண்ணில்பட்டது. உடனடியாக பைக்கை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் கீதாவை நோக்கி மெதுவாக நடந்து வந்தார். பின்னர் அந்த இளைஞர் திடீரென கீதாவின் தாலி செயினைப் பிடித்து இழுத்தார்.

செயின் பறிப்பு
செயின் பறிப்பு

அதனால் நிலைகுலைந்த கீதா, நடுரோட்டில் கீழே விழுந்தார். அப்போது சுதாரித்துக்கொண்ட கீதா, தாலிச் செயினைக் கைகளால் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். தாலிச் செயினைப் பிடித்து இழுத்த கொள்ளையனுடன் கீதா முடிந்தவரை போராடினார். அதோடு `திருடன், திருடன்...’ என அவர் சத்தமிட்டார். ஆனால் அதைச் சிலர் வேடிக்கை பார்த்தனர். இந்தச் சமயத்தில் கீதாவின் சத்தம் கேட்டு அந்தப் பகுதியிலுள்ள சிலர் வெளியில் வந்தனர். கீதா, நடுரோட்டில் கீழே விழுந்து கிடந்ததோடு கொள்ளையனுடன் போராடிக்கொண்டிருந்தார். இந்தக் காட்சிகளைப் பார்த்தவர்கள், கொள்ளையனைப் பிடிக்க ஓடி வந்தனர். அதைகவனித்த கொள்ளையன், பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.

சென்னை: ஒரே பைக், கூடவே பயணம்; நண்பனிடம் ஆள்வைத்து செயின் பறிப்பு! - கூட்டாளிகளுடன் சிக்கிய பின்னணி

தாலி செயினைக் காப்பாற்ற கொள்ளையனுடன் கீதா போராடியதில் அவரின் கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும், அவர் கர்ப்பிணி என்பதால் மிகவும் சோர்வடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து கீதா தரப்பில் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். தாம்பரம் வழியாக கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் செல்வதை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் குறித்த விவரம் இன்னும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை.

பைக்கில் தப்பிச் செல்லும் கொள்ளையர்கள்
பைக்கில் தப்பிச் செல்லும் கொள்ளையர்கள்

இதற்கிடையில் கர்ப்பிணியிடம் தாலி செயின் பறிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. அது, போலீஸாருக்குக் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. சம்பவம் நடந்து மூன்று தினங்களாகியும் கொள்ளையர்களைப் போலீஸார் பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் கீதாவுடன் கொள்ளையன் போராடும்போது அவனின் செல்போன் ஒன்று கீழே விழுந்திருக்கிறது. அதையும் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்திருக்கின்றனர். அந்த செல்போனுக்கு 30-க்கும் மேல் ஒரே செல்போனிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதன் அடிப்படையிலும் போலீஸார் விசாரித்துக்கொண்டிருக்கின்றனர்.

11 சவரன் தாலி செயின் பலமாக இருந்ததாலும், கீதா அதை விடாமல் பிடித்துக்கொண்டதாலும் கொள்ளையன் கையில் செயின் கிடைக்கவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காலதாமதமாவது குறித்து விசாரித்தபோது, பல்லாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அதுதான் விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் சொல்லப்படுகிறது.

செயின் பறிப்பு கொள்ளையனுடன் துணிச்சலாகப் போராடி 11 சவரன் தாலி செயினைக் காப்பாற்றிய கீதாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு