Published:Updated:

`2-வது திருமணம்; செல்போனில் பேசிய ஆண் நண்பர்!’ -ஆம்பூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ஆம்பூர் அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் மகேஸ்வரனுடன் ரேவதி
கணவர் மகேஸ்வரனுடன் ரேவதி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த சுட்டகுண்டா மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (23). பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ஏற்கெனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்த ரேவதி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரை இரண்டாவதாக மணந்தார்.

ரேவதி
ரேவதி

கணவர் ஓசூரில் வேலைசெய்வதால் அவருடனேயே தங்கியிருந்தார். இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த ரேவதி, கடந்த சனிக்கிழமை கணவருடன் சுட்டகுண்டாவில் உள்ள தன் வீட்டுக்கு வந்தார். இரண்டு நாள்கள் கழித்து மகேஸ்வரன் ஓசூருக்குச் சென்றுவிட்டார். பாட்டியுடன் வீட்டிலிருந்த ரேவதி நேற்று முன்தினம் இரவு கணவருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, சிக்னல் கிடைக்காததால் போனை எடுத்துக்கொண்டு மலைப் பகுதிக்குச் சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், அதே பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரேவதி சடலமாகக் கிடந்தார். தகவலறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் உமாராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர்.

ரேவதி
ரேவதி

ரேவதியின் கழுத்தில் ரத்தக் காயம் இருந்தது. `துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்’ என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

மேலும், `அவரின் கழுத்திலிருந்த 10 பவுன் நகையைக் காணவில்லை’ என்று உறவினர்கள் கூறினர். அதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அணைக்கட்டு பகுதி கரடிக்குடியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசியது தெரியவந்தது. மேலும், ரேவதியின் முதல் கணவரையும் விவாகரத்துக்குப் பிறகு பெண் பார்த்துவிட்டுச் சென்ற நபரையும் விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

`அழகு இல்லாதது கவலையா இருக்கு...!' - உதவியாளரின் திடீர் மரணத்தால் கலங்கிய ஓ.பி.எஸ்

ரேவதியின் செல்போனைக் கைப்பற்றியுள்ள போலீஸார் கடைசியாக அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பதையும் ஆய்வு செய்துவருகிறார்கள். ரேவதியின் கொலையில் அவரின் சித்தி சித்ராவுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.