Published:Updated:

பாலியல் வழக்கு... போக்ஸோ சட்டம்! -வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி

சாந்தகுமார்
சாந்தகுமார்

வேலூர் மத்திய சிறையில், பாலியல் வழக்கு கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பல்லலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் சாந்தகுமார் (22), மரம் ஏறும் தொழிலாளி. சாந்தகுமாரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காதலித்துவந்தனர். திருமணம் செய்துகொள்வதாக சாந்தகுமார் கூறியதை நம்பி அந்தப் பெண்ணும் பலமுறை ஆசைக்கு இணங்கியிருக்கிறார்.

வேலூர் சிறை
வேலூர் சிறை

இதனால், கர்ப்பமடைந்த இளம்பெண் சாந்தகுமாரிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். திருமணம் செய்ய மறுத்த சாந்தகுமார் அந்தப் பெண்ணுக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டது. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் குறைப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைப் பிறந்த பிறகும் காதலியை மனைவியாக்கிக் கொள்ள விரும்பாத சாந்தகுமாருக்கு இந்த மாதம் 3-ம் தேதி, வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காதலி கொடுத்த புகாரின் பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார் 4-ம் தேதி சாந்தகுமாரைக் கைதுசெய்தனர். போக்ஸோ சட்டத்தின்கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சாந்தகுமார்
சாந்தகுமார்

இந்தநிலையில், சிறை அறையிலிருந்த சாந்தகுமார் இன்று காலை ஜன்னல் கம்பியை வளைத்து வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரைச் சிறை அலுவலர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சாந்தகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள். மன உளைச்சலில் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து சிறைத் துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

`மாணவியை ஏமாற்றிய காதலன்; வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்!'- நாகையில் போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது
அடுத்த கட்டுரைக்கு