Published:Updated:

சென்னை: மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவர்! - குற்ற உணர்ச்சியில் சிறையில் தற்கொலை

மனைவியைக் கொலை செய்த துளசிராம்
மனைவியைக் கொலை செய்த துளசிராம்

சென்னையில் மனைவியை விடிய விடிய சித்ரவதை செய்து கொலை செய்த கணவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குற்ற உணர்ச்சியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் செல்வி (50) இவரின் மகள் அஞ்சம்மாள் (33). இவருக்கும் சிதம்பரம் சூர்யா நகரைச் சேர்ந்த ராமு என்கிற துளசிராம் (35) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாகப் பாலமுருகன் நகரில் குடியிருந்து வந்தனர்.

அஞ்சம்மாள்
அஞ்சம்மாள்

இந்தநிலையில் மனைவி அஞ்சம்மாள் மீது துளசிராமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 16.6.2020-ல் மனைவி அஞ்சம்மாளை விடிய விடிய டார்ச்சர் செய்துள்ளார் துளசிராம். பின்னர் மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்த துளசிராம், அதிகாலை வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அஞ்சம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குழந்தைகள் கணவிழித்துள்ளனர். பின்னர், அவர்கள் பக்கத்து வீட்டுக்குச் சென்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகே, அஞ்சம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ரத்தம் அதிகம் வெளியேறியதால் அஞ்சம்மாள் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து அஞ்சம்மாளின் அம்மா செல்வி, சோழவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், துளசிராம் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அவரை பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து 3.7.2020-ல் பொன்னேரி கிளைச் சிறையிலிருந்து புழல் மத்திய சிறை 2-க்கு துளசிராம் இடமாற்றப்பட்டார்.

 புழல் சிறை
புழல் சிறை
`மனைவிமீது சந்தேகம்; விடிய விடிய டார்ச்சர்' -குழந்தைகள் கண்முன்னால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

மனைவியைக் கொலை செய்த குற்ற உணர்ச்சியிலிருந்த துளசிராம், கடுமையான மனவிரக்தியில் இருந்துள்ளார். அதனால் 17.7.2020-ம் தேதி மாலை சிறை வளாகத்தில் 1-வது பிளாக்கின் அறை ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்குப்போட்டு துளசிராம் தற்கொலை செய்துள்ளார். அதைப் பார்த்த சிறைக் காவலர்கள் துளசிராமை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், துளசிராம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புழல் சிறை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புழல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு