உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி உயிரிழந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (44). அதே பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 9-ம் தேதி, வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் இவர் உட்பட நான்கு பேர்மீது திட்டச்சேரி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதில் மூன்று நபர்கள் தலைமறைவான நிலையில், சிவசுப்பிரமணியனை மட்டும் போலீஸார் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனையடுத்து போலீஸார் சிவசுப்பிரமணியனை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.
அங்கு சிவசுப்பிரமணியனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிவசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸார் தரப்பில் உடல்நலக் குறைவு காரணமாக சிவசுப்பிரமணியன் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரின் உறவினர்கள் போலீஸார் தாக்கியதால்தான் சிவசுப்பிரமணியன் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.