Published:Updated:

`உண்மையை வெளியே சொல்லிவிடுவேன்!'- யுவராஜின் ஆட்டத்தால் கலங்கும் திருச்சி சிறைத்துறை

 யுவராஜ்
யுவராஜ்

சிறைக்குள் இருக்கும் யுவராஜ், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து வெளியிட்டுள்ள ஆடியோவால் திருச்சி சிறைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்தியச் சிறையில் இருக்கிறார் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ்.

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் என்பவர் சாதி மாறிக் காதலித்ததாகக் கூறப்பட்டு வந்தநிலையில், கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தின் அருகே பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்தவர் யுவராஜ். தொடர்ந்து அவர், வெளியிட்ட பல்வேறு ஆடியோக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஷ்ணுபிரியா
விஷ்ணுபிரியா

மேலும், திருச்செங்கோடு போலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை குறித்து இவர் வெளியிட்ட ஆடியோக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து தமிழக போலீஸாருக்குச் சவால் விட்டுவந்த யுவராஜ், நெருக்கடிகள் அதிகரிக்கவே வேறுவழியில்லாமல் சரணடைந்தார். பிறகு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜ், பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Vikatan

சிறைக்குள்ளும் இவரது செயல்கள் எல்லை மீறிப் போய் கொண்டிருப்பதாகப் புகார் வாசிக்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள். சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் என்பவரை யுவராஜ் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் காவலர்கள். அப்போது யுவராஜின் அறையில் இருக்கும் கழிவுநீர்த் தொட்டியில் இரண்டு செல்போன் சிம் கார்டுகள் மற்றும் சார்ஜர் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் சிறைத்துறை அதிகாரிகள். இதனடிப்படையில் திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து, அவர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யுவராஜ்
யுவராஜ்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் யுவராஜ் வெளியிட்ட புதிய ஆடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ``திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ முறையாக விசாரிக்கவில்லை. என்னை விசாரிக்காமல், வழக்கை அவசரமாக முடித்துள்ளனர். என்னிடம் விசாரித்திருந்தால், விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாகப் பல ஆதாரங்களைக் கொடுத்திருப்பேன். இந்த வழக்கில், உண்மையை வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் என்னைக் கொல்வதற்கு முயல்கிறார்கள்" என அந்த ஆடியோவில் கூறியுள்ளார். இந்த ஆடியோ குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், யுவராஜ் சிறைக்குள் செல்போன் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் அவரைத் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது.

Vikatan

ஆனால், அதைத் தவிர்த்த போலீஸார் பாதுகாப்பு காரணங்களுக்காக யுவராஜை வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். யுவராஜ் ஆடியோ ஆதாரம் குறித்து தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு