`தேர்வு எழுத வந்த கைதிகள்; பிளேடால் அறுப்பு!’ - சென்னை புழல் சிறையில் மோதல் #Corona

சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகளுக்குள் மோதல் நடந்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத வந்த கைதிகள் மோதியதற்கான காரணத்தைத் தெரிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கருமலைகூடல் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன் (33). இவர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைதான சௌந்தராஜன், 30.7.2019-ம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர், பிளஸ் -2 தேர்வு எழுத சென்னை புழல் சிறைக்கு 26.2.2020-ல் வந்தார். இவர், சிறையில் 18-வது அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்வு எழுதிய சௌந்தராஜன், மீண்டும் சேலம் சிறைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்குள் கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அதனால், சௌந்தராஜனால் சேலத்துக்குச் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கையில் ரத்தம் வழிந்த நிலையில் நேற்றிரவு சிறை அறைக்குள் சௌந்தராஜன் மயங்கி கிடந்துள்ளார்.
அதைப்பார்த்த சிறைக் காவலர்கள் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். சௌந்தராஜனின் இடது கையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறைக்காவலர்கள் விசாரித்தபோது, சௌந்தராஜன், துணியைக் காயவைத்தபோது சிறைக் காவலர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவர் தங்கியிருந்த அறையிலிருந்து வேறு அறைக்குச் சிறைக்காவலர்கள் மாற்றியுள்ளனர். அதனால்தான் மனவேதனையடைந்த சௌந்தராஜன், தன்னுடைய கையை அறுத்துள்ளார் எனத் தெரியவந்தது.
இந்தநிலையில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. புழல் சிறையில் தேர்வு எழுத வந்த கைதி முத்துசாமியும் (57) ஆயுள் தண்டனை கைதி சக்திவேலும் (30) கை, கழுத்து பகுதியில் காயங்களுடன் கிடப்பதாக சிறைக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புழல் போலீஸார் கூறுகையில், ``கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் முத்துசாமி. இவர் 26.2.2020-ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுத புழல் மத்திய சிறைக்குக் கடலூரிலிருந்து வந்தார். கடலூர் சிறையிலிருந்து சக்திவேல் என்ற கைதியும் பிளஸ் 2 தேர்வு எழுத சென்னை புழல் சிறைக்கு வந்திருந்தார்.

இவர்கள் இருவரும் பிளாக் 1ல் அடைக்கப்பட்டிருந்தனர். 7.4.2020ம் தேதி சக்திவேலை ஓரினச்சேர்க்கைக்கு முத்துசாமி அழைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு சக்திவேல் மறுத்துள்ளார். இதனால் சிறை அறையிலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முத்துசாமி, மறைத்து வைத்திருந்த பிளேடால் சக்திவேலின் கழுத்து, வலது காது பகுதியில் கிழித்துள்ளார். பின்னர், முத்துசாமி, அதே பிளேடால் தனது இடது கையின் மணிக்கட்டை அறுத்துள்ளார்.
சக்திவேலின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிறைக்காவலர்கள் இருவரையும் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முத்துசாமிக்கு 8 தையல்களும் சக்திவேலுக்கு கழுத்து பகுதியில் 6 தையல்களும் காது பகுதியில் 4 தையல்களும் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

கடலூர், சேலம் சிறைகளிலிருந்து சென்னை புழல் சிறைக்குத் தேர்வு எழுத வந்த கைதிகள் திரும்பிச் செல்வதற்குள் கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அவர்கள் திரும்ப கடலூர், சேலத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை எனச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைக்குள் நடந்த இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு எப்படி பிளேடு கிடைத்து என்று சிறைக்காவலர்கள் விசாரித்துவருகின்றனர்.