Published:Updated:

குன்னூர்: பொதுவெளியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியார் கிளினிக்! - அதிரடி காட்டிய நகராட்சி

நகராட்சி அதிகாரிகள்
நகராட்சி அதிகாரிகள்

நீலகிரியின் சாலை ஓரங்கள், வனப்பகுதிகள் என பொது இடங்களில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகளை யாரோ மர்ம நபர்கள் கொட்டிச் செல்கிறார்கள் எனத் தேடப்பட்டு வந்தநிலையில், தனியார் கிளினிக் நிர்வாகமே இத்தகைய செயலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், அபாயகரமான மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அத்துமீறி பொது இடங்களில் ரகசியமாக கொட்டிச் செல்வது தொடர் நிகழ்வாகிவிட்டது.

மருத்துவக் கழிவுகள்
மருத்துவக் கழிவுகள்

ஊட்டி லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை திறந்தவெளியில் வீசியதும், அவற்றை குரங்குகள் வனப்பகுதிளுக்குள் இழுத்துச் சென்றதும் காணொளியாக வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாதிரிகள், கூடலூர் பழைய பேருந்து நிலைய சாலையோரங்களில் வீசிச் சென்றது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பயன்படுத்தப்பட்ட பி.பி.டி கிட்கள்
பயன்படுத்தப்பட்ட பி.பி.டி கிட்கள்

அது மட்டுமல்லாமல் கூடலூரின் ஐயன்கொல்லி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. சமீபகாலமாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் செல்வது அதிகரித்திருக்கிறது. குன்னூர் நகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்துவந்தனர்.

இந்தநிலையில், குன்னூர் மௌண்ட் ரோடு அருகிலுள்ள கூட்டுறவு வங்கி அருகில் மருத்துவக் கழிவுகள் கொட்டியிருப்பதை நகராட்சி ஊழியர்கள் கண்டறிந்தனர். விசாரணை மேற்கொண்டதில் ஒரு தனியார் கிளினிக் இப்படி ஒரு செயலில் ஈடுப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளினிக் நடத்திவரும் மருத்துவர்கள் ரவிச்சந்திரன், நித்தியா இருவருக்கும் அபராதம் விதித்தனர்.

நகராட்சி அதிகாரிகள்
நகராட்சி அதிகாரிகள்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குன்னூர் நகராட்சி அதிகாரிகள், ``பொதுவெளியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளில் கிளினிக்கின் மருந்துச் சீட்டுகளும் இருந்தன. இவை சம்பந்தப்பட்ட தனியார் கிளினிக்குகளுக்குச் சென்று விசாரணை நடத்தினோம்.

பொது சுகாதாரத் திட்டம் மற்றும் திறந்தவெளியில் மருத்துவக் கழிவு கொட்டு தடுப்பு விதி ஆகியவற்றின் கீழ் இரண்டு டாக்டர்களுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

மருத்துவக் கழிவுகள்
மருத்துவக் கழிவுகள்

மக்கள் செயற்பாட்டாளரான ஊட்டி ஜனார்த்தனன், ``அபாயகரமான மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் அப்பாவி பொதுமக்களும், கால்நடைகளும், வன விலங்குகளும் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இது போன்ற நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு