சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 14 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சிறுமியின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதனால் சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நந்தகுமார் (39) என்பவர், கடந்த நான்கு மாதங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து சிறுமி தரப்பில் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சிறுமியிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமி அளித்த தகவலின்படி நந்தகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நந்தகுமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்டுள்ள நந்தகுமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். சிறுமியுடன் நட்பாகப் பழகிய நந்தகுமார், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் தகவலை சிறுமி, வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில்தான் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகே அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது" என்றனர்.
