Published:Updated:

`அதிகாலை போன்; ஆபீஸில் டென்ஷன்'- ஐ.டி ரெய்டுக்குப்பிறகு இறந்த கணக்காளர்

`ஆபீஸில் டென்ஷன் என்று மட்டும்தான் என் கணவர் கூறினார். அதன்பிறகு அவரை சடலமாகதான் பார்த்தேன்' என்று கணக்காளர் செந்தில்குமாரின் மனைவி கண்ணீர்மல்க கூறினார்.

கணக்காளர் செந்தில்குமார், சித்ரா
கணக்காளர் செந்தில்குமார், சித்ரா

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் அடையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி வேலைக்குச் சென்ற செந்தில்குமார் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவர் சித்ராவிடம் ஆபீஸில் டென்ஷன் என்று மட்டும் பேசியுள்ளார். பிறகு மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டார்.

செந்தில்
செந்தில்

இந்த நிலையில், இன்று அதிகாலை சித்ராவுக்கு செந்தில்குமார் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளது. அதில் பேசியவர் உடனடியாக அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் அங்கு சென்றுள்ளார் சித்ரா. அப்போது செந்தில்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். செந்தில்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ரா அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக செந்தில்குமாரின் சடலம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது.

இதுகுறித்து செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் பேசினோம். ``நானும் அவரும் காதலித்து கடந்த 2009-ல் திருமணம் செய்துகொண்டோம். முதலில் பாலவாக்கத்தில் குடியிருந்தோம். தற்போது வடபழனியில் குடியிருக்கிறோம். செந்தில், கடந்த 10 ஆண்டுகளாக அடையாறில் இறால் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை காலையில் செந்தில் குமாருக்கு நிறுவனத்தின் உரிமையாளர் போன் செய்தார். உடனே புறப்பட்டு வரும்படி கூறினார். இதனால் அவரும் காலை 8 மணியளவில் சென்றுவிட்டார். அதன்பிறகு 3 நாள்கள் வீட்டுக்கு வரவில்லை. போனும் செய்யவில்லை. சனிக்கிழமை காலையில் வந்தார். ஆபீஸில் டென்ஷன் என்று மட்டும்தான் கூறினார். மகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார்.

பெண்ணின் கழுத்தை அறுத்து காதலனும் தற்கொலை! - தூத்துக்குடி விபரீதம்
சித்ரா
சித்ரா

இன்று அதிகாலை ஆபீஸிலிருந்து செந்தில் போன் செய்தார். பின்னர், மருத்துவமனையில் அவரை சடலமாகதான் பார்த்தேன். அவர் எப்படி இறந்தார் என்று கேட்டதற்கு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று மட்டும் சொல்கின்றனர். ஆனால் அவரின் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவரின் லேப்டாப், 40,000 பணம், 5 சவரன் நகைகளை வருமான வரித்துறையிலிருந்து வருவதாகக்கூறி வீட்டுக்கு வந்தவர்கள் எதற்காக எடுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. செந்திலின் மரணத்துக்கான காரணம் தெரிய வேண்டும்" என்றார் கண்ணீருடன்

செந்தில்குமாரின் உறவினர் சேகர் கூறுகையில், ``செந்தில் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கடந்த 3 நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. அதன்பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கின்றனர். இது நம்பும் படியாக இல்லை. அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழையல்ல. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. செந்தில்குமாரின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சடலமாக செந்தில்குமார்
சடலமாக செந்தில்குமார்

அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் என்ன நடந்தது என்பதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும். இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்கூட மனைவியுடன் செந்தில் போனில் பேசியுள்ளார். `ஆள் வருகிறார்கள் பிறகு பேசுகிறேன்' என்று மட்டும் சொல்லியுள்ளார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தில்குமாரின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. பிரேதப் பரிசோதனையில் அவரின் இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``செந்தில்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி சித்ரா புகார் கூறியுள்ளார். இதனால் அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் விசாரணை நடந்துவருகிறது. அதன்பிறகுதான் செந்தில்குமாரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்படும்" என்றார்.

சித்ரா
சித்ரா

அடையார் காவல் நிலையத்தில் சித்ரா கொடுத்த புகாருக்கு சரியான நடவடிக்கை இல்லை என்று கூறிய செந்தில்குமாரின் உறவினர்கள், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். செந்தில்குமார் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து மறைமுக மிரட்டல்கள் வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சில ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் சித்ரா குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக செந்தில்குமாரின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை