Published:Updated:

`அறையில் அடைத்து தற்கொலை செஞ்சுக்கோன்னு மிரட்டுறாங்க!' - வீடியோவில் கதறிய உதவிப் பேராசிரியை

``உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்னை துன்புறுத்துகிறார்கள். இரண்டு நாள்களாகத் தண்ணீர்கூட கொடுக்காமல் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள்" என முகநூலில் பதிவிட்டிருந்தார் உதவிப் பேராசிரியை.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள தாகூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணிபுரிபவர் ரீட்டா (பெயர் மாற்றம்). கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ``எனக்கு இந்தக் கல்லூரியில் நிறைய டார்ச்சர் இருக்கிறது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் என்னைக் கல்லூரி நிர்வாகத்தினர் துன்புறுத்துகிறார்கள். தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்கள். இரண்டு வாரமாக உணவு கொடுப்பதில்லை. கடந்த இரண்டு நாள்களாகத் தண்ணீர்கூட கொடுக்காமல் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளுமாறு என்னை மிரட்டுகிறார்கள். எனக்கு நீதி வேண்டும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்” எனப் பேசியிருந்தார். இதையடுத்து காவல்துறையினரின் உதவியோடு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

”எங்களை டார்ச்சர் செய்கிறார்!” - துணை இயக்குநருக்கு எதிராகக் களம் இறங்கிய ஊழியர்கள்

கல்லூரி நிர்வாகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன் என்பவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் அறையில் உடை மாற்றும்போது பொதுமேலாளர் செல்போனில் படம் பிடித்ததாகவும் துப்புரவுப் பணியாளர் முனியம்மாள் செல்போன் மற்றும் பணத்தைத் திருடியதாகவும் வீடியோவில் பேசியிருந்தார். மேலும், கல்லூரி நிர்வாகத்துறையில் உள்ள செந்தில் என்பவர் தன்னை தலையில் அடித்து மிரட்டியதாகவும் கல்லூரி துணை முதல்வர் பணிவிடுப்பு ஆணையைப் பெற்றுக் கொள்ளுமாறு செல்போனைப் பிடுங்கி மிரட்டியதாகவும் 5 பேர் மீது தாழம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரீட்டா. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட நபர்களின் மீது தாழம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tagore Medical college
Tagore Medical college

ரீட்டாவுக்கு உதவியாக இருந்த `எய்ம்ஸ்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கன்யா பாபு என்பவரிடம் பேசினோம். “சமூக வலைதளங்களில் வந்த வீடியோவைப் பார்த்துவிட்டுக் கடந்த ஞாயிறு அன்று அந்த மருத்துவக் குடியிருப்புக்குச் சென்றோம். அந்தக் குடியிருப்பு மூடப்பட்டிருந்ததால் காவல்நிலையத்தில் நடந்ததைத் தெரிவித்தோம். பின்பு, காவல்துறையினரின் உதவியுடன் மறுநாள் அவரின் அறைக்குச் சென்றோம். அவர் பயந்த நிலையில் படபடப்பாக இருந்தார். மூன்று நாள்களாக அவரின் அறையை ஏன் பூட்டினார்கள் என்பது குறித்து கல்லூரியில் விசாரித்தோம். `நாங்கள் அவரின் அறையைப் பூட்டவில்லை. ரீட்டா சரியாகக் கல்லூரிக்கு வருவதில்லை. சரியாகப் பாடம் எடுப்பதில்லை. அவரின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் இதுபோன்று வேறுமாதிரியான பிரச்னைகளை எழுப்புகிறார்’ எனக் கல்லூரி தரப்பில் விளக்கம் சொன்னார்கள்.

கடந்த ஒரு வருடமாகவே கல்லூரி நிர்வாகத்துக்கும் இவருக்கும் பிரச்னை இருப்பது தெரியவந்தது. ரீட்டா ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாரா அல்லது கல்லூரி நிர்வாக நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது இனிதான் தெரியவரும். ஆனால், மனரீதியாக அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. குடும்பச்சூழல் காரணமாக அவர் தன்னுடைய குடும்பத்தை விட்டுப்பிரிந்து வாழ்கிறார் என்பது தெரிந்தது. காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஏற்பாடு செய்கிறோம் எனச் சொன்னபோது, ஆரம்பத்தில் மறுத்துவிட்டார். சட்ட ரீதியாகப் போராடவும், வேறு இடத்தில் தங்க வைப்பதற்கும் உதவுகிறோம் என அந்தப் பெண்ணுக்குத் தைரியம் அளிக்கும் வகையில் தொடர்ந்து பேசினோம். பின்பு அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஒப்புக்கொண்டார்.

`அறையில் அடைத்து தற்கொலை செஞ்சுக்கோன்னு மிரட்டுறாங்க!' - வீடியோவில் கதறிய உதவிப் பேராசிரியை

ஆனால், அவர் தனக்குத் தனியான வீடுதான் வேண்டும் எனச் சொல்லி வருகிறார். அந்தப் பெண் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதால் கவுன்சலிங் மிகவும் அவசியம். அதனால், கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம். கல்லூரி தரப்பில் பேசி அவர் அறைக்குத் தண்ணீர் கொடுக்கச் சொன்னோம். உணவு உள்ளிட்ட சில வசதிகளைச் செய்து கொடுக்கவும் கல்லூரி நிர்வாகத்தில் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு தரப்பினரையும் தொடர்ந்து விசாரித்தால்தான் உண்மை என்னவென்று தெரியவரும்.” என்கிறார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா சந்திரன் அவர்களிடம் பேசினோம். "வழக்கு விசாரணையில் இருப்பதால் இதுகுறித்து நாங்கள் எதுவும் தற்போது பேச முடியாது" என்றதோடு முடித்துக் கொண்டார்.