Published:Updated:

10 சொகுசு வீடுகள், 30 இளம்பெண்கள், பாலியல் தொழில்... தஞ்சாவூர் பகீர்!

செந்தில்குமார் வீடு...
செந்தில்குமார் வீடு...

தஞ்சாவூரில் வடமாநில இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், செங்கிப்பட்டிப் பகுதியில் காரிலிருந்து தள்ளிவிட்டு சென்ற தம்பதியர் கைதுசெய்யப்பட்டனர்

ஜூன் 1-ம் தேதி... தஞ்சாவூர்-திருச்சி சாலை, செங்கிப்பட்டி பகுதியில் கார் ஒன்று சீறிப்பாய்ந்து சாலையோரம் திடீர் பிரேக் அடித்து நிறுத்தப்படுகிறது. கார் கதவைத் திறந்து 20 வயது மதிக்கத்தக்க வட மாநிலப் பெண் ஒருவர் கீழே தள்ளப்படுகிறார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மீண்டும் சீறிப் பாய்ந்து கிளம்பிவிட்டது கார். கீழே தள்ளிவிடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல் முழுக்க காயங்கள்... முகம் வீங்கியிருக்கிறது. யார் அந்தப் பெண், அவர் எதற்காக கீழே தள்ளப்பட்டார்? விசாரித்தால் குலை நடுங்குகிறது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அந்தச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வியிடம் பேசினோம். ''படுகாயங்களுடன் இருந்த அந்தப் பெண் இந்தியில் பேசினார். தமிழ் தெரியவில்லை. இந்தி தெரிந்த வரை வைத்து விசாரித்தோம்... அந்தப் பெண் சொன்ன தகவல்கள் எங்களைத் தூக்கிவாரிப் போடச் செய்தன.

'வீட்டு வேலை என்று சொல்லி அழைத்து வந்து அடித்துத் துன்புறுத்தினர். பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இன்னும் மூன்று பெண்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுங்கள்'என்று கதறினாள் அந்தப் பெண்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மேலவஸ்தாசாவடி, ஊர்தியார் தெருவில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பிரமாண்ட வீட்டில்தான் அந்தப் பெண் அடைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறார். செந்தில்குமாரும், அவரின் இரண்டாவது மனைவியான ராஜமும்தான் இந்தப் படுபாதக வேலையைச் செய்திருக்கின்றனர். `வீட்டு வேலைக்கு...'எனச் சொல்லிப் பெண்களை அழைத்துவந்து அடித்துத் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக இதை அவர்கள் செய்து வருவதாகத் தெரிகிறது." என்றார் அவர்.

தஞ்சாவூரில் வடமாநில இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், செங்கிப்பட்டிப் பகுதியில் காரிலிருந்து தள்ளிவிட்டு சென்ற தம்பதியர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூரில் இந்தத் தம்பதியர் தலைமையில் ஒரு கும்பலே 10-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகளை வாடகைக்கு எடுத்து, 30-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் தெரியவந்திருக்கிறது.

மேற்கண்ட விவகாரத்தில் தம்பதியர் செந்தில்குமார்-ராஜம், லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ராமச்சந்திரன், பழனிவேல் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் பேசினோம்.

பிரபாகரன் - செந்தில்குமார் - ராஜம் - ராமச்சந்திரன் - பழனிவேல்
பிரபாகரன் - செந்தில்குமார் - ராஜம் - ராமச்சந்திரன் - பழனிவேல்

"ஒரு பெண்ணைத் தொடர்ந்து பத்து நாள்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். பிறகு அவரை அனுப்பிவிட்டு மற்றொரு பெண்ணை வரவழைப்பார்கள். செந்தில்குமார் - ராஜம் தம்பதியர் இதற்காகவே ஒரு டைரியை மெயின்டெயின் செய்தார்கள். அதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மொபைல் எண்கள் மற்றும் சுமார் ஆயிரம் கஸ்டமர்களின் மொபைல் எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் சோதனை செய்தபோது தஞ்சாவூரிலுள்ள பல முக்கிய வி.ஐ.பி-க்கள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இவர்களுக்கு கஸ்டமர்களாக இருப்பது தெரியவந்திருக்கிறது. உயர் ரக கார் ஒன்றையும் படுக்கை வசதியுடன் மாற்றி, அதையும் பாலியல் தொழில் மொபைல் வாகனமாக மாற்றியிருக்கிறார்கள்..."

- சொகுசு காரில் மொபைல் 'சேவை'- ரகசிய டைரியில் வி.ஐ.பி-கள் பட்டியல்... போலீஸ் தரப்பு பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்! https://bit.ly/2AkVzvV

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு