Published:Updated:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..! - திருச்சியைப் பதறவைக்கும் பாலியல் தொழில்!

பாலியல் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழில்

சபல நோக்கத்திலோ, உண்மையாகவே மசாஜ் செய்துகொள்ள வேண்டும் என்றோ இது போன்ற மசாஜ் மையங்களை இணையத்தில் தேடத் தொடங்கினால் போதும்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..! - திருச்சியைப் பதறவைக்கும் பாலியல் தொழில்!

சபல நோக்கத்திலோ, உண்மையாகவே மசாஜ் செய்துகொள்ள வேண்டும் என்றோ இது போன்ற மசாஜ் மையங்களை இணையத்தில் தேடத் தொடங்கினால் போதும்

Published:Updated:
பாலியல் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழில்
துறையூரைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். ஐடி நிறுவன ஊழியரான அவர் தற்போது ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’-ல் இருக்கிறார். உடல் ‘அலுப்பாக’ இருப்பதாகக் கருதியவர், மசாஜ் சென்டரை இணையத்தில் தேடியிருக்கிறார். உடனே போட்டி போட்டுக்கொண்டு அலைபேசியில் அவருக்கு வலைவீசியிருக்கின்றன மசாஜ் மையங்கள். ஒருவழியாக தில்லை நகரிலிருக்கும் ஒரு ‘ஸ்பா’வுக்குச் சென்றவருக்கு, இளம்பெண் ஒருவர் ‘ஃபுல் பாடி’யையும் மசாஜ் செய்திருக்கிறார். அந்தக் கிறக்கத்தில் சொக்கியவர், பத்து நிமிடங்கள் கண்களை மூடி அயர்ந்துவிட்டார். கண்விழித்துப் பார்த்தால், பர்ஸிலிருந்த 6,800 ரூபாயைக் காணோம்! ஸ்பாவில் கேட்டால், ‘எங்களுக்கென்ன தெரியும்... உங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னொரு சம்பவம். திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் அந்தக் கல்லூரி இளைஞர். வசதியானவர். திருச்சி, பொன்நகரில் ஒரு வீட்டில் மசாஜ் செய்வதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றிருக்கிறார். வட இந்திய இளம்பெண்கள் இருவர் அவரை வரவேற்று, தனியறையில் வைத்து மசாஜ் செய்திருக்கிறார்கள். மசாஜ் செய்யும்போதே அந்தப் பெண்கள் இருவரும், அரைகுறை ஆடையில் அந்த இளைஞருடன் மிக நெருக்கமாக இருப்பதுபோல செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த இளைஞருக்குத் தெரியாமல் அவரை ‘முழுதாக’ போட்டோவும் எடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு வாட்டசாட்டமாக வந்த நபர் ஒருவர், மசாஜ் கட்டணமான 10,000 ரூபாயுடன், கூடுதலாக 40,000 ரூபாய் கேட்டிருக்கிறார். அதிர்ந்துபோன அந்த இளைஞரிடம் அந்தப் புகைப்படங்களைக் காட்டியே 50,000 ரூபாயைப் பிடுங்கிக்கொண்டு துரத்திவிட்டிருக்கிறது அந்தக் கும்பல்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..! - திருச்சியைப் பதறவைக்கும் பாலியல் தொழில்!

இப்படி, சிறிதும் பெரிதுமாக நிறைய சம்பவங்கள். இது குறித்து நம்மிடம் பேசிய சோர்ஸ் ஒருவர், “சபல நோக்கத்திலோ, உண்மையாகவே மசாஜ் செய்துகொள்ள வேண்டும் என்றோ இது போன்ற மசாஜ் மையங்களை இணையத்தில் தேடத் தொடங்கினால் போதும்... உடனடியாக அவர்களின் செல்போன் எண்ணைத் தேடிப்பிடித்து அழைக்கும் புரோக்கர்கள், ‘ `வீட்டுச் சாப்பாடு’ எப்படி உடம்புக்குக் கெடுதல் இல்லையோ அப்படி ‘வீட்டு மசாஜ்’ உடம்புக்குக் கெடுதல் பண்ணாது; இங்கே எல்லாருமே ஃபேமிலிதான். பக்குவமா பண்ணுவாங்க... பயப்படாம வாங்க’ என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். அதிலும் சில மையங்களில் ஆளைப் பார்த்து எடைபோட்டு, கொஞ்சம் பயப்படும் ஆசாமியாக இருந்தால், அவர்களை பிளாக்மெயில் செய்து பணம், நகையைப் பறித்துக்கொண்டு விரட்டிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன” என்றார்.

லோகநாதன் - கிஷோர்
லோகநாதன் - கிஷோர்

இதில் பாதிக்கப்பட்டவர் களில் பலரும் கெளரவம் கருதி புகார் கொடுப்பதில்லை. சிலர் மட்டும் புகார் கொடுக்கிறார்கள். இந்தநிலையில்தான், சமீபத்தில் திருச்சி நகரின் மசாஜ் சென்டர்களில் போலீஸ் ரெய்டு நடத்தியது. இதில் கருமண்டபத்தில் ‘ஸ்பா சென்டர்’ என்கிற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ‘தர்ஷினி ஆயுர்வேதிக் கேர் ஸ்பா’, ‘ஆரஞ்சு ஸ்பா’, பொன்நகரில் ‘ஹெவன்லி ஸ்பா’, எல்.ஐ.சி காலனியில் ‘திவ்யம் ஆயுர்வேதிக் ஸ்பா’ ஆகிய மையங்களில் பத்து இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உரிமையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். சில மசாஜ் சென்டர்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..! - திருச்சியைப் பதறவைக்கும் பாலியல் தொழில்!

இது போன்ற பாலியல்ரீதியிலான குற்றங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்துவரும் வழக்கறிஞர் கிஷோரிடம் பேசினோம். “திருச்சி மாவட்டத்தில் மட்டும் 160-க்கும் மேற்பட்ட ஸ்பாக்களை, வீடுகளில் குடிசைத் தொழில்போல நடத்திவருகிறார்கள். கே.கே.நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் பாலியல் தொழில் செய்துவருகிறார்கள். ஒரு முறை இவர்களிடம் சென்றுவிட்டால்போதும்... செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொள்பவர்கள், பிறகு அடிக்கடி அழைத்து சபலம் ஏற்படுத்துவார்கள். ஒருகட்டத்தில் மிரட்டும் தொனியில் பேசுவார்கள்” என்றவர், அதன் பிறகு சொன்ன மற்றொரு விஷயம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“திருச்சியில் பெரும்பாலும் இந்தத் தொழிலை நடத்துவதே இங்கிருக்கும் போலீஸாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்தான். எங்களைப் போன்ற ஆட்கள் இந்த முறைகேடுகளைத் தட்டிக்கேட்டால், சம்பந்தப்பட்ட போலீஸார் போனில் மிரட்டுகிறார்கள். தவிர இந்தப் பாலியல் தொழில், போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்காது. கடந்த ஆண்டு திருச்சி எஸ்.பி அலுவலகம் அருகேயிருக்கும் ஒரு லாட்ஜில் ‘வாய்ஸ் செக்ஸ்’ சென்டரை நடத்தினார்கள். வறுமையிலிருக்கும் பெண்களைப் பணத்துக்கு ஆசைகாட்டி, அவர்களை செக்ஸியாகப் பேசவைத்து பணம் பறித்தார்கள். ‘உங்களுக்கு மனநிம்மதி வேண்டுமா... இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க’ என்று மெசேஜ் அனுப்புவார்கள். இவர்களைக் குறித்து அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் ஆதாரங்களுடன் புகாரளித்தேன். அவர் உடனே நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது மீண்டும் அந்தக் கும்பல், வாய்ஸ் செக்ஸ் தொழிலில் இறங்கிவிட்டது” என்றார் ஆவேசமாக.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா..! - திருச்சியைப் பதறவைக்கும் பாலியல் தொழில்!

இது குறித்து திருச்சி போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் பேசினோம். “ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழில் செய்த ஐந்து பேரைக் கைதுசெய்து, பத்து பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஸ்பாக்களைத் தொடர்ந்து கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்புலத்தில் போலீஸ் உட்பட யார் இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள். வாய்ஸ் செக்ஸ் தொழில் குறித்து விசாரிக்கிறேன்” என்றார்.

‘விளக்குகள்’ அழைத்தாலும் ‘விட்டில்பூச்சிகள்’ சபலமெனும் நெருப்பில் விழாமலிருப்பதே பலம்!